Header Ads



53 வயதானவருடன் நிர்வாணமாக உரையாடுமாறு 15 வயது சிறுமிக்கு வற்புறுத்தல்


நெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரைத் திருமணம் செய்யுமாறு, தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 வயதான சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.


அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த சிறுமி, பிரான்ஸ் நாட்டில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பியிருந்த 20 வயதான இளைஞனுடன், சில தினங்களுக்கு முன்னர்   தலைமறைவாகி இருந்தார்.


அது தொடர்பில், சிறுமியின் பெற்றோரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, தலைமறைவான சிறுமியும் இளைஞனும் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு , சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் போது , பாலியல் வன்புணர்வுக்கு சிறுமி உள்ளாகவில்லை எனத் தெரியவந்ததையடுத்து , அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.


குறித்த சிறுமியிடம், பொலிஸாரும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் முன்னெடுத்த விசாரணையின் போது, சிறுமி கூறியதாவது: “எனது பெற்றோர் நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு , வற்புறுத்தி , என்னைத் தாக்கி வந்தார்கள்.  நெதர்லாந்தில் உள்ளவருடன் ‘வீடியோ கோல்’ மூலம் உரையாடுமாறு வற்புறுத்தினார்கள்.


அவர், என்னை நிர்வாணமாக வீடியோ கோலில் உரையாடுமாறு கோரிய போது, நான் அதற்கு மறுத்து, பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள், அவருடன் அவ்வாறு உரையாடுமாறு வற்புத்தினார்கள்” என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோரை கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   

எம். றொசாந்த்

No comments

Powered by Blogger.