Header Ads



VIP க்களின் உதவியுடன், சாக்கு மூட்டைகளில் கொண்டு செல்லப்பட்ட பலகோடி பணம்


பெரும் செல்வந்தர்களை ஏமாற்றி பலகோடி ரூபாவை மோசடி செய்த திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி தனது கணவருடன் கதிர்காமம் கோவிலுக்கு உலங்கு வானூர்தியில் பல தடவைகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், துறவிகள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பலகோடி ரூபாய் பணம் சாக்கு மூட்டைகளில் வைத்து உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் இயங்கி வந்த திகோ குழுமத்தின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விரிவான விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.


திலினி பிரியமாலி என்ற சந்தேகநபர் தான் கோடீஸ்வரர்களை ஏமாற்றிய பணத்தை ஆயுதம் தாங்கிய காவலர்கள் மற்றும் அவரது நிறுவனத்தில் டெபாசிட் செய்த நபர்களின் உதவியுடன் எப்படி சாக்கு மூட்டையாக கொண்டு வந்தார் என்பதை உலக வர்த்தக மையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராயவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


இந்த பெரும் மோசடியில் சிக்கிய பிரபல அரசியல்வாதிகள், கோடீஸ்வர தொழிலதிபர்கள், பிரபல நடிகர், நடிகைகள் சிலர் உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள சந்தேகநபரின் வணிக இடத்திற்கு வந்ததாக வெளியான தகவலால், அந்த நபர்களை துல்லியமாக அடையாளம் காண சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சந்தேகநபர் திலினி பிரியமாலி எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு ஐம்பதாயிரம் ரூபா பணம் வழங்குவதாக உறுதியளித்து அவருக்கு தொலைபேசி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


மேலும் அந்த தொலைபேசியை பெண் கைதி ஒருவர் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.


இது தவிர, சிறையில் அடைக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த மற்றொரு தொலைபேசியையும் சிறை புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.



இரண்டு தொலைபேசிகளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட திலினியின் தனிப்பட்ட கைத்தொலைபேசியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் விசாரணையின் போது, ​​பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. tamilwin

No comments

Powered by Blogger.