Header Ads



மூளை செயலிழந்தவர் பற்றி குடும்பத்தினர் எடுத்த தீர்மானம், குவிகிறது பாராட்டுக்கள் - வெளிநாட்டு மருத்துவர்களும் உதவி (படங்கள்)


வாகன விபத்துக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் அனுமதியுடன் தானம் செய்வதற்காக மூளை சாவடைந்தவரை விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வைத்தியசாலையின் பிரதான மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஹசலக மகாஹஸ்வெத்தும கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதான எம்.ஜீ. சந்திம என்பவர் உடல் உறுப்புகளையே தானம் செய்ய உறவினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். குடும்பத்தினரின் இந்த முடிவை பலரும் பாராட்டியுள்ளனர்.


ஹசலக பிரதேச சபையில் சாரதியாக தொழில் புரிந்து வந்த இந்த நபர், பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.


தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக முதலில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


எனினும் அவரது மூளை செயலிழந்து விட்டதால், அவரால் தொடர்ந்தும் உயிர் வாழ முடியாது என மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவரை மரணத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்றால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவியும் பிள்ளைகளும் தீர்மானித்து, அதனை மருத்துவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.


இதனடிப்படையில், பதுளை வைத்தியசாலையில் மருத்துவர்கள் குழு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அறிவித்து, தேவையான நடவடிக்கைகளை தயார் செய்துள்ளனர்.


உலங்குவானூர்தி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள மூளை சாவடைந்தவரின் இதயம், வெளிநாட்டு மருத்துவர்களின் உதவியுடன் வேறு நோயாளிக்கு பொருத்தப்பட உள்ளது.


நுரையீரல் மற்றும் கல்லீரல் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், சீறுநீரகங்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இரண்டு நோயாளிகளுக்கும் பொருத்தப்படவுள்ளன.


பதுளை வைத்தியசாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மூளை சாவடைந்தவரின் உடலில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்ட பின்னர், உடலை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மரண விசாரணைகளை நடத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பதுளை வைத்தியசாலையின் பிரதான மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார். 





1 comment:

  1. ஒரு நபருக்கு உயிர்ப்பிச்சையளிப்பது உலகில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் உயிர் வழங்கி வாழவைத்த நன்மையை அல்லாஹ் வழங்குவதாக அல்குர்ஆனில் அல்லாஹ் வாக்குறுதியளித்திருக்கின்றான். இந்த வாக்குறுதியை நம்பி எத்தனை மூளையிழந்த முஸ்லிம்கள் மற்றொரு நோயாளிக்கு வாழ்வை வழங்கியிருக்கின்றனர். வீணாப் போன அரசியல்வாதிகள். உளரும் மற்றவர்களின் பேச்சை நம்பி தமது பணம் சொத்துக்களைக் கொடுத்து இறுதியில் ஏமாந்து கிடக்கும் எத்தனை ஆயிரம் மனிதர்களை நாம் பார்க்கின்றோம். நம்மைப் படைத்த ரப் நமக்கு வழங்கும் வாக்குறுதியை நம்பி எம்மில் எத்தனை பேர் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றியிருக்கின்றனர். பத்து இலட்சத்தில் ஒருவரையும் கூற முடியாது. அதே நேரம் மனிதர்களுடன் வாழும் மனிதத்தன்மையை மாத்திரம் நம்பும் மற்றவர்கள் எவ்வளவு அழகாக இந்த பணியை நிறைவேற்றுகின்றார்கள். அவர்களுக்கு ஈமானும் சுவர்க்கமும் கிடைக்க நிச்சியம் அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்வதுடன் நிச்சியம் நாமும் இந்தப்பணியில் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அடுத்த உடலுறுப்புகளைத் தானம் செய்த நபராக ஒரு முஸ்லிம் இருப்பதைக் காண நாம் ஆசைப்படுகின்றோம். இந்த ஸதகதுல் ஜாரியாவைச் செய்ய முன்வருவோமா?

    ReplyDelete

Powered by Blogger.