Header Ads



பிணை முறிகள் வழக்கிலிருந்து ரணிலின் நண்பர், அர்ஜுன மகேந்திரன் விடுதலை


மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட முதலாவது பிணை முறி வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட பொதுச்சொத்துகள் சட்டத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டை முன்கொண்டு செல்ல முடியாதென தீர்மானித்த கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து பிரதிவாதிகள் 10 பேரையும் விடுவித்து இன்று உத்தரவிட்டது.


மூன்றில் இரண்டு பெரும்பான்மை தீர்ப்பின் பிரகாரம் நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.


சமத் மொராயஸ், தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இந்த வழக்கில் Perpetual Treasuries நிறுவனமும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பௌதீக நிறுவனமாக இல்லாத நிறுவனத்திற்கு எதிராக பொதுச்சொத்துகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சட்டப்பூர்வ இயலுமை இல்லை எனவும் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனை தாக்கல் செய்திருந்தார்.


இந்த அடிப்படை ஆட்சேபனை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாலும் ஏனைய பிரதிவாதிகளில் பெரும்பான்மையானவர்கள் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இருந்ததாலும் அவர்களுக்கு எதிராக அதே குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.


இதற்கமைய, பொதுச்சொத்துகள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் அன்றி ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 16 ஆம் திகதி நடத்த நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.


2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலத்தில் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 23 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


லக்ஷ்மன் அர்ஜூன மகேந்திரன், பத்தினிகே சமரசிறி, Perpetual Treasuries நிறுவனம், அர்ஜூன் ஜோசப் அலோசியஸ், கசுன் பலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், புஷ்ப சந்திர குணவர்தன, சித்த ரஞ்சன், ஹுலுகல்ல முத்துராஜா சுரேந்திரன் மற்றும் அஜஹான் காந்திய புஞ்சிஹேவா ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. அர்ஜுனன் மஹேந்திரனுடைய வழக்கின் உண்மை நிலைமை நீண்ட காலமாக நீதிபதி குலாமுக்குக்கூட சரியாக தௌிவாகவில்லை. இப்போதுதான் அவர்களுடைய உண்மைநிலை நீதிபதிகளுக்குத் தௌிவாகிவிட்டது. எனவே அவர்களை தேவையற்ற குற்றச் சாட்டுக்கள் அனைத்தில் இருந்தும் அர்ஜுனன் மஹேந்திரன், மருமகன் அலோசியஸ் உற்பட அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களையும் நீதிமன்றம் அவர்கள் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை என விடுதலை செய்து விட்டது.உலகிலேயே நீதித்துறை மிகச்சிறப்பாக இயங்கும் ஒரே நாடு இலங்கையாகும் என உலகெங்கும் பேசப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.