Header Ads



ஜனநாயக வழியில் இந்த ஆட்சியை கவிழ்த்தே தீர வேண்டும், நாட்டில் பற்றுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்


இந்த ஆட்சி நீடித்தால் ஜெனிவாவில், இலங்கைக்கு எந்தவொரு நாடும் ஆதரவு வழங்க முன்வராது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த பிரேரணை, நாளை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் வாக்களிக்க தகுதியுள்ள 47 நாடுகளில் ஆறு நாடுகள் மாத்திரமே தமக்கு ஆதரவாக அதாவது குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று இலங்கை அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இலங்கை பிரஜை என்ற ரீதியில் எமது நாட்டுக்கு ஆதரவாகவே இருப்பேன். இலங்கை மீதான சர்வதேச பொறிமுறையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்.


உள்நாட்டு பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறையூடாகவே தீர்வு காண வேண்டும்.


நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலங்களில் ஜெனிவா விவகாரங்களை நாட்டுக்கு ஆபத்து ஏற்படாதவாறும், நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படாதவாறும் சாதுரியமாக கையாண்டேன்.


ஆனால், தற்போது நிலைமை எல்லை மீறிப் போகின்றது போல் தெரிகின்றது. இந்த ஆட்சி நீடித்தால் ஜெனிவாவில் இலங்கைக்கு 6 நாடுகள் மட்டுமல்ல எந்தவொரு நாடும் ஆதரவு வழங்க முன்வராது.


சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின்றி இலங்கை அநாதையாகும் நிலையே ஏற்படும். எனவே ஜனநாயக வழியில் இந்த ஆட்சியை நாம் கவிழ்த்தே தீர வேண்டும்.


நாட்டின் மீது பற்றுள்ள அனைவரும் இந்த நடவடிக்கைக்காக ஓரணியில் திரள வேண்டும்"என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.