Header Ads



கோட்டாபய சார்பில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத பரிதாபம்


2011ஆம் ஆண்டில், லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போனமை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், இன்று (19) கட்டளையிட்டது.


கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய போது, மனித உரிமைகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதியன்று காணாமல் போயிருந்தனர்.


லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை தொடர்பில் 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 27ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சாட்சியமாக ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

 

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்குச் சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும்அந்த நீதிமன்றத்தின் அழைப்பாணையை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் அடிப்படையில் அழைப்பாணை இரத்துச் செய்யப்பட்டது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


அதன்போது, முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு மனுவின் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே சுட்டிக்காட்டினார்.


எனினும், முன்னாள் ஜனாதிபதி சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாக வில்லை என்பதால், மனுதாரர்களின் வாதத்தைக் கருத்திற் கொண்ட உயர்நீதின்றம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டிசெம்பர் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்கான நோட்டீஸை மீண்டும் பிறப்பிப்பதற்கு தீர்மானித்தது.

No comments

Powered by Blogger.