Header Ads



சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையை, எந்த மொழியில் எழுதுவது..?


சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு சட்ட மாஅதிபர் மற்றும் பிரதம நீதியரசர் தலைமையிலான சட்ட ஆய்வுக்குழுவுடன்  கலந்துரையாடி இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படுமென நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவது என்ற தீர்மானம் தொடர்பில் நேற்றும் சபையில் வாத விவாதங்கள் நடைபெற்றன.இதன்போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


சட்டக்கல்லூரிக்கான நுழைவு போட்டிப் பரீட்சையை ஆங்கில மொழியில் எழுதுவதில் மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படுவது தொடர்பான விடயத்தை எனக்கு சுட்டிக்காட்டியதற்கமைய சட்ட கற்கை நிலையத்தின் தலைவரான சட்ட மாஅதிபருக்கு அதனை அறிவித்தவுடன் அதனை அவர் சட்டம் கற்கை பற்றிய குழுவுக்கு சமர்ப்பித்திருந்தார்.


அதன்படி சட்டம் கற்கை பற்றிய குழு இதுதொடர்பாக கலந்துரையாடி அவர்களின் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது.


சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சையை ஆங்கிலத்தில் மாத்திரம் நடத்துவதற்கு எடுத்த தீர்மானத்தை அவ்வாறே செயற்படுத்துமாறும் அந்தக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள்.


எனினும் அதுதொடர்பாக மீண்டும் சட்ட மாஅதிபர் மற்றும் சட்டம் கற்கை பற்றிய குழுவுடனும் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானத்தை சபைக்கு அரிய தர முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.