Header Ads



வடபுல முஸ்லிம்களின் எதிர்காலம்


- சுஐப் எம்.காசிம் -


பிறப்பிடத்தால் வலிகளைச் சுமந்த வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? கரடு முரடான பாதைகளில் கட்டி எழுப்பும் தேவைகளுக்குள் உள்ளது வடபுல முஸ்லிம்களின் எதிர்காலம். பலவந்த வெளியேற்றத்தால் ஏதிலிச் சமூகமாகக் கட்டமைந்த இந்த முஸ்லிம்கள் எந்தத் தேசியங்களுக்குள் உள்வாங்கப்படுவரோ தெரியாது.


தமிழ் மொழி பேசுவோர் தமிழ் தேசியத்தாலும், சிங்களம் பேசுவோர் சிங்கள தேசியத்தாலும் பாதுகாக்கப்பட்ட சூழலில்தான், 1990 ஒக்டோபர் 30 இல் வடக்கிலிருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரே மொழியைப் பேசினாலும், தமிழ் தேசியம் இவர்களை உள்வாங்க விருப்பின்றியிருந்தது. இந்த வெளியேற்றமே இதைச் சுட்டிக்காட்டியது. இதனால், மூன்றாம் தேசியம் என முஸ்லிம்கள் அடையாளப்பட வேண்டி வந்தது.


இந்தப் பிளவுகள் தேவையா? இல்லை, மீண்டும் தமிழ் பேசும் சமூகமாக தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றிணைவதா? இதுதான் இன்றுள்ள கருத்தாடல். தெற்கில் திடீரென எழுந்த பெரும்பான்மைவாதமும், இதனால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சங்களும்தான் இந்தச் சிந்தனைகளைக் கிளறுகின்றன. ஊர் இரண்டுபட்டதால் ஊறுவிளைவிக்கப்படும் சமூகங்களாக தமிழரும், முஸ்லிம்களும் மாற்றப்பட்டு வருகின்றனர். காலப்போக்கில் தமிழ் மொழியின் தாயகத்தையும் இந்தப்போக்குகள் துண்டாடிவிடலாம். 


ஏற்கனவே, கிழக்கு துண்டாடப்பட்டு குறுநிலமாக்கப்பட்டுள்ளது. வெளியேற்றம்தான் துண்டிப்புக்கான நியாயத்தை ஏற்படுத்தியதாக முஸ்லிம் தரப்பு கருதுகிறது. துண்டிப்பை தூண்டாதிருந்திருந்தால் வடக்கில் மீண்டும் வாழ வழி பிறந்திருக்கும் என்கின்றனர் தமிழர்கள். இவ்வாறான எதிர்மறை விவாதங்களே ஒருமொழித் தேசியத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது. 


இதனால்தான், நமது தாயகம் சமஷ்டி அதிகாரத்தைப் பெறவில்லை. பாரிய மக்கள் கூட்டம், தொடரான நிலப்பரப்பு, பொதுவான வாழ்வாதாரம், பொதுவான மொழி, வேறுபாடற்ற கலாசாரங்களுக்குத்தான், சமஷ்டி அதிகாரம். இவையெல்லாம் வடக்கு, கிழக்கில் இருந்தும் (மதம்) எங்களைக் கூறுபோட்டு விட்டது. யார் இதைக் கூறுபோட்டனர்? இதற்குப் பின்னாலிருந்த சக்திகளின் சித்தாந்தம் என்ன? இப்போதும், இந்தச் சித்தாந்தம் இருக்கிறதா? இந்தச் சந்தேகங்கள் களையப்படல் அவசியம். 


பொறுப்புக்கூறல், மீள்குடியேற்றம் என்பவற்றில் அக்கறை செலுத்தியுள்ள இவ்வாண்டின் ஜெனீவா அமர்வு, இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு நீதம் செய்யுமாறும் வலியுறுத்தி உள்ளது. எனவே, மீள்குடியேற்ற விடயத்தில் வடபுல முஸ்லிம்களை, அங்குள்ள பெரும்பான்மைதான் (தமிழ்) ஆதரிக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதும், ஏனைய விடயங்களில் இணங்கி, நெருங்கி வருவதும்தான் கடந்த கால நமது பொதுமொழி அடையாளங்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு.


முஸ்லிம் தரப்புக்கும் இதில் கடப்பாடுகள் இல்லாமல் இல்லை. கிழக்கு பிரிந்ததால் வடக்கு முஸ்லிம்களுக்கு விடிவா கிடைத்தது? கிழக்கிலும் குதர்க்கம்தானே! “தாய், பிள்ளைச் சண்டை தண்ணீரில் எழுதிய எழுத்து” என்பார்கள். எனவே, இம்முரண்பாடுகள் நீர்க்குமிழிகள் போல கரைந்தோட வேண்டும். அரசியலுக்காக வெளியேற்றப்பட்ட இந்த வடபுல முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதில் கரடு முரடான பாதைகள் பல கடக்கப்பட்டுள்ளன. இதில், காலத்தால் எதிர்கொள்பவையும் கனதியானவைதான். இந்தக் காலக் கனதிகளில்தான் வடபுல முஸ்லிம்கள் களமாடுகின்றனர். தென்னிலங்கை மாவட்டங்களில் அகதிகளாக வாழும் இவர்கள், சொந்த இடங்களுக்குத் திரும்புவதில் அக்கறையற்றிருப்பதும் காலக்கழிகைகளால்தான். 


அமைச்சர் டக்ளஸின் கவிதை இம்மக்களுக்கும் பொருந்துமோ? "நேற்று என்பது உடைந்த பானை, இன்று என்பது மதில் மேல் பூனை, நாளை என்பதே நமது ஆணை.”


வெளியேறி வந்து 32 வருடங்களாவதால், இரண்டு தலைமுறைகள் தலைப்பட்டுவிட்டன. கல்வி, தொழில்வாய்ப்பு, சூழலின் தாக்கம் அல்லது பிடிப்பு என்பவற்றால் இளையவர்கள் வடபுலம் செல்லும் விருப்புடனில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை படிப்பித்து, திருமணம் செய்து, ஏற்கனவே வாழும் தென்னிலங்கை மாவட்டங்களில்தான் குடியிருத்த விரும்புகின்றனர். இதற்குப் பின்னர்தான் அதாவது, முதலாவது தலைமுறையினர்தான் வெளியேற்றப்பட்ட இடங்களுக்கு வர நேரிடப்போகிறது. வாழ்க்கையும், வசதியும் வாய்த்துவிட்ட இடங்களிலிருந்து எவர்தான் வெளியேறத் துணிவர். 


சமூக நல்லிணக்க அரசியலை நோக்கி நாட்டை நகர்த்தும் புதிய அரசியல் கலாசாரம் பிறந்துள்ள சூழலிது. இன்னும் தேசியம், சமஷ்டி என்றா சிந்திப்பது? "வாழ்பவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?" எனவே, மக்களின் மனங்களை வெல்லும் அரசியல் கலாசாரத்துக்குள் நம்மை அழைத்துச் செல்லும் புதிய வழிகளில் பாதங்களை பதிப்போம்.

No comments

Powered by Blogger.