Header Ads



ஓமானிலிருந்து 8 கிலோ தங்கத்துடன் வந்தவர் கைது


சுமார் 17 கோடி ரூபா பெறுமதியான 8.5 கிலோ தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட 02 பெண்கள் உட்பட நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினரால் நேற்று -30- கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஓமானின் மஸ்கட்டிலிருந்து நேற்று அதிகாலை வந்திறங்கிய WY 0371 விமானத்தில் வந்த 04 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கடமையாற்றும் ​​இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், நேற்று அதிகாலை (30) இந்த விமானத்தில் இலங்கைக்கு வந்த ஒரு பெண் உட்பட முதல் மூன்று பயணிகளை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.


இதன்போது, தங்கத்தை மிக சூட்சுமமாக தகடுகளாக தயாரித்து தங்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துச் செல்ல முற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போதே ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.


இவர்களிடமிருந்து 7.5 கிலோ எடை கொண்ட தங்க தகடுகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.


அதுபோன்று, அதே விமானத்தில் இலங்கைக்கு வந்த மற்றுமொரு பெண் பயணி சுமார் ஒரு கிலோ தங்கத்தை தனது குதத்தில் மறைத்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட போது சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா என (12 மில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பில் சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் 20 அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.