Header Ads



பாராளுமன்ற குழுவில் 7 மூளையுடையவரின் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் வெட்கப்பட வேண்டும்


அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அறிவார்ந்த பலர் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை என்றும் அது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கோப் குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சர்ச்சையின் போதே தயாசிறி ஜயசேக்கர எம்பி இவ்வாறு தெரிவித்தார்.


அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 35 உறுப்பினர்களில் அறிவார்ந்த பெரும்பாலானோர் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை.குறுகிய அரசியல் நோக்கத்துக்காக எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது


அரசாங்கத்தின் குறைப்பாடுகளை பகிரங்கப்படுத்துவதால் எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது. சுயாதீன உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே,திஸ்ஸ விதாரன,ரத்ன சேக்கர உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் கடந்த கோப் குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்..சுயாதீன தரப்பினர்களின் நான் உள்ளிட்ட அறிவார்ந்த பெரும்பாலானோர் கோப் மற்றும் கோபா குழுக்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 18 வருடகாலமாக கோப் மற்றும் கோபா குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்துள்ளேன்.எந்நிலையிலும் ஊழல் மோசடியாளர்களுக்கு துணைபோகவில்லை.அரச நிறுவனங்களின் பல மோசடிகளை அறிக்கையிட பொறுப்புடன் செயற்பட்டுள்ளேன்.எனினும் என்னையும் கூட நீக்கியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


அதனையடுத்து எழுந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி.,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான உறுப்பினர்கள் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை.


மாறாக ஏழு மூளையுடையவரின் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெட்கப்பட வேண்டும் கோப் குழுவின் உறுப்பினர் நியமனத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. கோப் குழு உறுப்பினர் நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்திக்கொள்ளப்பட வேண்டும்.



இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம். பி, கோப் குழு உறுப்பினர் நியமனத்தில் எவரது பெயரையும் நாம் நீக்கவில்லை.தவறான கருத்து தோற்றுவிக்கப்பட்டுள்ளது.யார் பெயர்களை நீக்கினார்கள் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் குறிப்பிடவில்லை.


ஆகவே எதிர்க்கட்சி தலைவர் கோப்குழுவுக்கு சரித ஹேரத்தின் பெயரை பரிந்துரைத்துள்ளார் என்றார்.


இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச நான் ஏழு அறிவுடையவர் என எதிர்கட்சிகளின் பிரதம கொறடாவை குறிப்பிடவில்லை.ஆளும் தரப்பில் இருந்தவரையே குறிப்பிட்டேன் என்றார்.


இதன்போது எழுந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி சுயாதீன எம்.பி. டளஸ் அழகபெரும:


விமல் வீரவன்ச,தயாசிறி ஜயசேக்கர ஆகியோர் தமது தனிப்பட்ட தேவைகளை குறிப்பிடவில்லை.கோப் மற்றும் கோபா ஆகிய முக்கிய குழு நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது,கருத்து சுதந்திரத்துக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்தின் முக்கிய தீர்மானங்களின் இறுதி தீர்மானத்தை எடுக்கும் உரிமை சபாநாயகருக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.


ஆளும் மற்றும் எதிர் தரப்பு மற்றும் நாட்டு மக்கள் மத்தியில் கோப் குழுவின் முன்னாள் உறுப்பினர் சரித ஹேரத்திற்கு அங்கீகாரமுள்ளது.பல மோசடிகளை அவர் பகிரங்கப்படுத்தினார்.அரசாங்கம் ஏன் இவ்வாறு செயற்படுகிறது. என்பது கேள்விக்குறியானது.


ஆகவே சபாநாயகர் பொறுப்புகளிலிருந்து விலகக் கூடாது.நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.225 உறுப்பினர்களையும் வெறுக்கிறார்கள்.இவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் அரசியல் கட்டமைப்பையும் கடுமையாக சாடுகிறார்கள்.மறுபுறம் சுயாதீன உறுப்பினர்களுக்கு உரிய காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.தொடர்ந்து சபையை மலினப்படுத்த வேண்டாம் என்றார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.