Header Ads



நலன்புரி நன்மைகளை பெற, ஒக்டோபர் 28 வரை விண்ணப்பிக்கலாம்


நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கு தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் திகதி ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், 'எவரையும் கைவிடாதீர்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கு தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்றுடன் நிறைவடையவிருந்தது.


எனினும், இதற்கான இறுதித் திகதி தற்போது நீடிக்கப்பட்டிருப்பதனால், விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, தற்போது உதவித்தொகையைப் பெற்று வரும் சமுர்த்தி, வயோதிபர்கள், அங்கவீனமானோர், சிறுநீரக நோயாளர்கள், பொதுமக்கள் உதவித்தொகை பெறுவோர் உள்ளிட்ட அனைத்து பயனாளிகளும் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயனாளிகளும் நலன்புரி நன்மைகளைப் பெற எதிர்பார்த்திருப்பவர்களும் இப்புதிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


www.wbb.gov.lk எனும் நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.


பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் குறித்த பிதேசத்திற்குரிய பிரதேச செயலாளர் அலுலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விபரங்களை 0112151481 அல்லது 1919 என்ற அரச தகவல் மத்திய நிலையத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.


நேற்று வரை நாடு முழுவதுமுள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்களிலுள்ள சமூக சேவைகள் பிரிவில் 2.4 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதுடன்,  10,83,724 விண்ணப்பங்களின் தரவுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


இந்த சமூக நலன்புரி வேலைத் திட்டத்திற்காக இதுவரை சுமார் 3.9 மில்லியன் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.