Header Ads



22 இல் உள்ள முக்கிய விடயங்கள், இறுதி நேரத்தில் பசிலுக்கு ஆப்பு, பலம் பெறும் ரணில்

 
22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று (21) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது திருத்தத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், எவரும் எதிராக வாக்களிக்கவில்லை.


திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு அதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.


இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்ட ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.


ஐக்கிய மக்கள் சக்தி,  ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.


அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் 40-க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை.


ஜனாதிபதியின் தனி அதிகாரத்தை நீக்கி அரசியலமைப்பு பேரவையை அதனுடன் தொடர்புபடுத்துவது, சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


இரட்டை பிரஜாவுரிமையுள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவதற்கு இருந்த சந்தர்ப்பம் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம்  நீக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களும் ஆசனங்களை இழக்கவுள்ளனர்.


இரண்டரை வருடங்கள் கடந்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் புதிய ஏற்பாடுகளும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிக்கும்போது எதிர்க்கட்சித் தலைவரின் அபிப்பிராயத்தையும் கேட்டறிவதற்கு சட்டமூலத்தின் திருத்தங்களின் போது அனுமதி வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.