Header Ads



போலியான முகவர்களிடம் அகப்படாதீர்கள் - கடவுச்சீட்டு, பணத்தை வழங்கமுன் அவதானமாக இருங்கள்


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  


இவ்வாறு தொழில்வாய்ப்பினை நாடிச் செல்வோருக்கான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடி செய்யும் நபர்களிடம் அகப்பட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார  இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய சூழலில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல பெருமளவானோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.


இவ்வாறான நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக   கடவுச்சீட்டு அல்லது பணத்தை வழங்க முன்னர், அதனை பெற்றுக்கொள்ளும் நிறுவனம் குறித்து அவதானமாக இருக்குமாறு அமைச்சர் மனுஷ கோரிக்கை விடுத்துள்ளார். 


குறித்த நிறுவனங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா  என அதன் அனுமதிபத்திரத்தை சரிபார்த்து செயற்படுமாறு   அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.