Header Ads



தாக்கப்பட்டவர்கள் பற்றி கட்சி கவலைப்படாததால், எங்கள் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்


எதிர்வரும் தேர்தலிலும் இலங்கை பொதுஜன முன்னணி நாட்டின் அரசியலில் தீர்க்கமான காரணியாக மாறும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


கம்பஹா, உடுகம்பொல ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ´பொதுஜன முன்னணி கிராமத்திற்கு கிராமம்´ நிகழ்ச்சியின் மினுவாங்கொட தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தொகையான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் எத்தகைய சவால்கள் வந்தாலும் இலங்கை பொதுஜன முன்னணியைக் கைவிடப் போவதில்லை என அனைவரும் தெரிவித்தனர்.


எதிர்வரும் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தினால் எமது கட்சியினர் பலர் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தாக்கப்பட்டும் உள்ளனர். அந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டது. தாக்கப்பட்டவர்கள் பற்றி கட்சி கவலைப்படாததால் எங்கள் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த நேரத்தில் நாங்களும் ஆதரவற்று இருந்தோம். ஆனால் நாங்கள் முடிந்தவரை எங்கள் கட்சி உறுப்பினர்களைப் பார்த்தோம். உங்களைத் தனித்து விடமாட்டோம். எதிர்காலத்தில் கட்சி உங்களுக்கு நீதி வழங்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.


சதிகாரர்களை அடையாளம் காண முடியாதது எங்களின் பெரிய பலவீனம். 2014 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்த இடம். எங்களுடைய குறைபாடுகள் காரணமாக கிராமங்களில் நமது அரசியல் எதிரிகள் உருவாகினர். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களால் மக்கள் அரசியலில் சேர விரும்பவில்லை. எங்கள் கட்சியின் உள்ளுராட்சி உறுப்பினர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுவும் நியாயம் தான். அப்போது இருந்த நிலைமை இப்போது இல்லை. சவால்களுக்குப் பயந்து அரசியல் செய்ய முடியாது. எப்படியும் இந்த விளையாட்டை விளையாடித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நாம் தோற்று விடுவோம்.


எனது மினுவாங்கொடைத் தொகுதியானது சதிகாரர்களின் போராட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் இலங்கையில் அதிக வாக்கு சதவிகிதத்தைக் கொண்ட தொகுதி இது. நான் இன்னும் உங்களுடன் இருக்கிறேன். அது அப்படியே தொடரும். மக்கள் இன்னும் இந்தக் கட்சியுடன் தான் இருக்கிறார்கள். அந்த மக்களுக்குச் சரியான தலைமைத்துவத்தை வழங்கினால் வெற்றிப் பாதைக்குத் திரும்பலாம். அடுத்த தேர்தலிலும் இலங்கை பொதுஜன முன்னணி இந்த நாட்டு அரசியலில் தீர்க்கமான காரணியாக மாறும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.


அதன் காரணமாக இப்போது கட்சியைத் திட்டுவதில் அர்த்தமில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்காக பல செய்துள்ளார். அந்த விடயங்கள் சரியா? தவறா? என்று எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


மகிந்தானந்த அளுத்கமகே மேஜர் பிரதீப் உந்துகொட பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஏ.டி. ஜகத் குமார முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.