Header Ads



ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை - வருகிறது புதுச் சட்டம்


ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தில் இது தொடர்பில் தேவையான திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் புதிய திருத்தத்துக்கமைய 5 கிராம் அல்லது அதற்கு மேல் ஐஸ் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்கள் பிணை பெற தகுதியற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


தற்போது ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தவர்கள் அல்லது கடத்துபவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


எனினும், புதிய திருத்தத்துக்கமைய 5 கிராம் அல்லது அதற்கு மேல் ஐஸ் வைத்திருப்பவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்றார்.


இதேவேளை, 2017ஆம் ஆண்டு ஐஸ் வைத்திருந்த குற்றத்துக்காக 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும் எனினும், 2021 ஆம் ஆண்டில் அந்த தொகை 225 மடங்காக அதிகரித்து, 13,720 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.


22 வயது முதல் 26 வயதுக்குட்பட்ட தரப்பினரே இந்த போதைப் பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளனர் என்றும் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments

Powered by Blogger.