Header Ads



ஜெனீவாவில் இலங்கை அரசை பாதுகாத்த அலி சப்ரி - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம்


- சண்முகம் தவசீலன் - 


ஐக்கிய நாடுகள் மனித உரிமை  பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமான நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


அத்தோடு, தமக்கு  சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.


முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ்  ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர், முல்லைத்தீவு ஊடக அமையத்தில்  நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.


அவர்கள் மேலும் கருத்துரைக்கையில்,  


“ஐக்கிய நாடுகள் மனித உரிமை  பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது  விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு  சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது.


“இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையை தொடர்பான தீர்மானம்  கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.


“பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம்  இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த்த தீர்வும் இல்லாது, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த  தொடர்ச்சியான போராட்டம்  இன்று 2,015ஆவது நாளாக தொடர்கிறது.


“இந்நிலையில், ஜெனீவாவில் கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி, அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளது” என்றனர்.

1 comment:

  1. காணமால் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு இணக்கமான ஒரு தீர்வை வழங்கும் வரை இந்த பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு எந்த வழிவகையும கிடையாது. அலிசப்ரியின் கோட்டும் சூட்டும் அழகான பேச்சையும் கேட்பதற்கு அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடல் கடந்து எத்தனையோ பணிகளுக்கு மத்தியில் ஜெனீவா வரவில்லை. அவர்களின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு தேடி வரும்போது அவர்களின் கோரிக்கையைப் புறம் தள்ளிப் போட்ட காலம் மலையேறிவிட்டது. இனியும் அந்தப்பருப்பு வேகாது என்பதை அரசாங்கம் இப்போதாவது விளங்கிச் செயற்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.