Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடம் எடுத்த மத்திய வங்கி ஆளுநர் - கூறியது என்ன..?



பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பொருளாதார அபிவிருத்தி வேகம் சாதகமான நிலைக்குக் கொண்டுவரப்படுவதுடன், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர்

🔸 குறைந்த வருமானம் பெறுபவர்களைப் பாதுகாக்க சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

🔸 இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு எரிபொருள், மருந்து மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.

🔸 அரசாங்கத்தின் வருமானம் 14-15 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

🔸 பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் அசௌகரியங்கள் குறைந்த வருமானங்கள் பெறுபவர்களுக்கு மாத்திரமன்றி அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மத்தியிலும் பகிரப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வருமானம் பெறுபவர்களே பிரதானமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால் ஏழைகள் வீதிக்கு இறங்க நேரிடலாம் என்றும், இதனால் குழப்பமான சூழ்நிலை நாட்டில் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, அதிக வருமானம் பெறும் மற்றும் குறைந்த வருமானம் பெறும் இரண்டு தரப்பினர் மத்தியிலும் ஏற்படுகின்றன பொருளாதார அசௌகரியங்கள் பிரிந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டு, குறைந்த வருமானம் பெறுபவர்களின் அசௌகரியங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடன் பெறுவது கட்டுப்படுத்தப்பட்டு அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவித்தார். தற்பொழுது காணப்படும் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவீனங்களை நிர்வகிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்டார். 

இறக்குமதியைக் கட்டுப்படுத்தியதன் ஊடாக கடந்த  வருடத்தில் செலவீனத்தை 2 பில்லியன் ரூபாவரையிலும், இந்த வருடத்தில் 1.3 பில்லியன் ரூபாவரை குறைக்கமுடிந்திருப்பதாகவும், இதன் ஊடாக மருந்து, எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். விசேடமாகத் தற்பொழுது அரசாங்கத்தின் வருமானம் 1.2 பில்லியன் ரூபாவாக மாத்திரம் காணப்படுவதுடன், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்க முடிந்தால் அரசாங்கத்தின் வருமானத்தில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் விளக்கமளித்தார்.

மேலும் இந்த நெருக்கடியை ஓரிரு மாதங்களில் தீர்க்க முடியாது, இருந்தபோதும் இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை இந்த நெருக்கடிகளைப் பொறுத்துக் கொள்ளவேண்டிய நிலைமை காணப்படுகிறது என்றும் தெரிவித்தார். அத்துடன், இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் வருமானம் 14-15 விகிதம் வரையில் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் விளக்கமளித்தார்.

“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால நோக்கு” என்ற தலைப்பில் நேற்று (31) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற விவாதங்களின் போது, நிதி தொடர்பான விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலூக்கப் பங்களிப்பை உறுதிப்படுத்தவும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரப் பாதை குறித்து பயனுள்ள கலந்துரையாடலை ஏற்படுத்தவும் பாராளுமன்ற செயலகம் இந்தக் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருந்தது.





No comments

Powered by Blogger.