Header Ads



போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமானதாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசுக்கு விடுக்கின்றோம்


பட்டினி மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசுக்கு விடுக்கின்றோம் என புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-


உணவு மற்றும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


அதேபோல் உண்ண உணவில்லாததால் மாணவர்கள் பாடசாலைகளில் மயங்கி விழுகின்றனர் என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றர்.


தமது பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுக்க வீட்டிலே ஒன்றும் இல்லை என்று தாய்மார் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே, இந்நிலைமையை மறைப்பதற்கு எவர் முற்பட்டாலும், உணவு மற்றும் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.


எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால்தான் கடந்த ஏப்ரலில் மக்கள் போராட்டம் ஆரம்பமானது. உணவு மற்றும் மருந்துகளில்தான் மனித இருப்பு தங்கியுள்ளது.


இவை இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாத நிலை உள்ளது. மருந்து இல்லாமல் பெற்றோர் உயிரிழந்தால் பிள்ளைகள் கொதிப்படைவார்கள். உணவு இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்தால் பெற்றோர் கொதிப்படவார்கள்.


அந்தப் போராட்டங்கள் பயங்கரமானவையாக இருக்கும். அதேபோல் நாடு அராஜாக நிலைமைக்கும் செல்லும். இருப்பவர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்படலாம். கொள்ளை அடிக்கப்படலாம்.


கடைகள் உடைக்கப்படலாம். எனவே, அரசு, மக்களை ஒடுக்க வழி தேடாமல், பிரச்சினைகளுக்குத் தீர்வு தேட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.