Header Ads



ஜனாதிபதியின் வீட்டிலிருந்த சமபோஷ பக்கெட்டை திருடி 51 நாட்கள் சிறையில் இருந்தவர் 5 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை


கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வௌிநாட்டு மதுபான போத்தல்களை திருடிய நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கோட்டை நீதவான் திலின கமகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.


ஜனாதிபதியின் வீட்டிலிருந்த சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உள்ளிட்ட 06 சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சந்தேகநபர்கள் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை, அவர்கள் 22 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்றமை மற்றும் விசாரணை ஓரளவு முன்னெடுக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற்கொண்டு பிணை வழங்க தீர்மானித்ததாக நீதவான் கூறியுள்ளார். 


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிமாக வாக்குமூலங்களை பெறுவதற்கும் அவர்களது வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி  தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.


வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். 

No comments

Powered by Blogger.