Header Adsகஜிமா தோட்ட தீ - நிர்க்கதியாகியுள்ள 300 பேரும், வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களும்


கொழும்பு – பாலத்துறை, கஜிமா தோட்டத்தில் பரவிய தீயினால் 300 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 106 சிறுவர்களும் அடங்குகின்றனர்.


மாளிகையில் வசிப்போருக்கு இங்கிருந்த சேரி வீடுகள் அவலட்சணமாக தென்பட்டிருந்தாலும் சுமார் 300 பேருக்கு கஜிமா தோட்டம் அடைக்கல பூமியாக இருந்தது. 


எனினும், நேற்றிரவு ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த நேரத்திற்குள் இடம்பெற்ற அனர்த்தத்தால் அவர்கள் அனைவரும் இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.


தமது வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் மூன்று சந்தர்ப்பங்களில் தீக்கு இரையாக்கி விட்டு,  சாம்பராகியுள்ள தமது குடியிருப்புகளுக்கு அருகே செய்வதறியாது இன்றும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 


கஜிமா தோட்டத்தில்  தீயினால் 54 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இங்கிருந்த 220 குடியிருப்புகளில் மேலும் 11 குடியிருப்புகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. 


கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, கஜிமா தோட்டத்திற்கு இன்று காலை சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.


இடம்பெயர்ந்த மக்களை முகத்துவாரத்திலுள்ள சனசமூக நிலையம் மற்றும் விகாரையொன்றில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.


ஒன்றரை வருடங்களுக்குள் மூன்றாவது தடவையாக தீ பரவியுள்ளது. நாம் தொடர்ச்சியாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இந்த குடும்பங்களை மாற்று இடங்களில் குடியமர்த்துமாறு தெரிவித்திருந்தோம். எனினும், சில பிரச்சினைகள் காரணமாக அந்த நிறுவனங்களால் அதனை செய்ய முடியாமற்போனது. விரைவில் இவர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்


என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார். 


நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணித்துள்ள தொடர்மாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்படும் வரை தற்காலிகமாக மக்கள் குறித்த இடத்தில் மக்கள் தங்கியிருந்தனர். 


இதனிடையே, இந்த அனர்த்தம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெற்றது.


தற்காலிகமாக தங்கவைப்பதற்கான இடமாக இந்த பகுதியை தொடர்ந்தும் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கான இயலுமை குறித்து ஆராயுமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.


முதலில் 2021 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் 15 ஆம் திகதி முதற்தடவையாக தீ பரவியது. சில வருடங்களாக சட்டவிரோத நிர்மாணப் பணிகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.  இந்த விடயம் தொடர்பாக தலையீடு செய்து இந்த சட்ட விரோத கட்டடங்களை அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நாம் 10, 12 சந்தர்ப்பங்களில் அறிவித்தோம். ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. இங்குள்ள பலருக்கு இரண்டு, மூன்று வாகனங்கள் உள்ளன. சிலர் அம்மாவிற்கு ஒரு குடியிருப்பும், அப்பாவிற்கு ஒரு குடியிருப்பும் கிடைத்து, 5 பிள்ளைகள் இருப்பார்களாயின் அவர்கள் ஐந்து பேருக்கும் ஐந்து குடியிருப்புகள் கிடைக்கும் வரை உள்ளனர். ஆகவே இது முடிவுக்கு வராது


என மாதம்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரதீப் பெரேரா குறிப்பிட்டார். 


2014 இறுதியாகும் போது, அங்கு தங்கியிருந்த அனைவரும் அகற்றப்பட்டு அவர்களுக்கு வீடுகளை வழங்கினோம்.  இந்த கஜிமா தோட்டத்தில் உள்ள அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டு, அவர்களை மீள குடியமர்த்தி காணியை விடுவித்தோம். ஒரே இரவில் சட்டவிரோதமாக குறித்த காணியை பிடித்து மீண்டும் குடியேறினர்


என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர கூறினார். 


இவர்களுக்கான வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கத்திடம் ஒதுக்கீடு இல்லை எனவும் தீ பரவல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து அறிக்கை பெற்று, அவற்றை ஊடகங்களுக்கு வௌிப்படுத்த வேண்டும் எனவும் அப்போது தான் இங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.