Header Ads



ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 2 வாரங்களில் சட்டமாகும்


 ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்தார்.


கொழும்பில், இன்று (05) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.


அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான விடயங்கள், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் போது மீண்டும் திரும்பும் என்றும் தெரிவித்தார்.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆதாரங்களை சேகரிக்கும் எந்தவொரு சர்வதேச முயற்சியையும் இலங்கை எதிர்க்கும் என்று கூறினார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதிவரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ள நிலையிலேயே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.


இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்காளிகளுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்த அவர், எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.


தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை சமநிலைப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை தயாரிப்பதற்கும் இலங்கை தயாராகி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.