Header Ads



முழு மீனவ சமூகத்துடனும் வீதிக்கு வருவோம் என அரசுக்குச் சொல்லிவைக்கிறோம் - Dr காவிந்த


- Ismathul Rahuman -


  இந்த அரசாங்கம் மண்ணெண்ணெய் விலையை அதிகரித்து மீனவர்களின் தொழிலை கேள்விக்குறியாக்கியுள்ளது என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நீர்கொழும்பு தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளருமான டாக்டர் காவிந்த ஜயவர்தன நீர்கொழும்பு, முன்னக்கரையில் இடம்பெற்ற மண்ணெண்ணெய் விலை ஏற்றத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.

    ஐ.ம.ச. ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிந்த ஜயவர்தன தொடர்ந்து உரையாற்றுகையில் 

   அப்பாவி மீனவர்களின் வயிற்றில் அடித்து ஆறு மாதங்களாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மண்ணெண்ணெய் இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக பசியில் வாடுகின்ற மக்களுக்காக எமது பங்களிப்பைச் செய்யவே இந்த அடையாள ஆர்ப்பாடத்தை ஆரம்பித்தோம்.

  இந்த நாட்டு மீனவர் சமூகம் நாட்டுக்குப் பாரமின்றி மக்களின் பசியைப் போக்கிய பிரிவினர். இந்த நிலையில் 87 ரூபாவிற்கு இருந்த மண்ணெண்ணெய்யை 340 ரூபாவாக விலையை அதிகரித்து மீன்பிடித் தொழிலை கேள்விக் குறியாக்கியுள்ளனர்.இதனால் இன்று மீனவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இது அரசுக்கு விழங்குவதுமில்லை கேட்பதுமில்லை.

   இந்த நாட்டின் அபிவிருத்திக்காக மீனவர்கள் வருடமொன்றுக்கு 28 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு கொண்டுவர பங்களிப்புச் செய்துள்ளனர்.

  இந்த நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவனியை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்டுவரும் கடற்றொழிலாளர்களை விழங்கமுடியாத அரசு அவர்களின் வயிற்றில் அடித்துள்ளனர்.

   நாம் அரசுக்குச் சொல்வது உடனடியாக விலையைக் குறையுங்கள். நஷ்டமடைந்த கடந்த மூன்று மாதகாலத்திற்கான நஷ்டஈட்டை  கொடுங்கள். இல்லாவிட்டால் முழு மீனவ சமூகத்துடனும் வீதிக்கு வருவோம் என்பதை அரசுக்குச் சொல்லிவைக்கிறோம். நீர்கொழும்பு தொகுதியை மையமாகவைத்து நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம்.

     பொருளாதார நெருக்கடியில் மக்கள் வாழமுடியாத நிலைமையில் உள்ளதை அரசு உணராவிட்டாலும் முழு நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

 அன்று உரம் கேட்டு விவசாய்கள் வீதிக்கு இறங்கிய வேதனையை இன்று மீனவர்கள் உணர்ந்து அவர்களும் வீதிக்கு வந்துள்ளார்கள்.

 இந்த நாட்டின் பொருளாதார மத்திய ஸ்தானங்களுக்கு அடித்து நாசமாக்கி அரசு நாட்டை வீழ்ச்சியின் விளிம்புக்கே கொண்டுசென்றுள்ளது.

    இன்று பணவீக்கம் 70 வீதம். சிறுவர் போஷாக்கின்மை 20-40 வீதமாக அதிகரித்துள்ளது. 70 சத வீதமானவர்கள்  ஒரு நேரம் அல்லது இரு நேரம் சாப்பிடுவதில்லை. காரணம் வாழ்க்கைச் செலவை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இந்தளவுக்கு வறுமை நிலமைக்கு உள்ளாக்கியது ராஜபக்ஷாக்களும் இந்த அரசாங்கமும் ஆகும். இவ்வாறிருக்கையில் அவர்களின் அமைச்சு செலவினங்களுக்காக 480 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கிக்கொண்டுள்ளனர்.

   விவசாய்கள் உரமின்றி,மீனவர்கள் எண்ணெய் இன்றி குழந்தைகள் போஷாக்கின்றி மக்கள் கஷ்டப்படும் போது அவர்களின் பாதுகாப்புக்காக அரசை கொண்டுசெல்கின்றனர்.      உங்கள் காலம் குறுகியது.இந்த நாட்டின் ஏழைமக்களின் கண்ணீரை புரிந்துகொள்ள முடியாத உங்களுக்கு விழங்கும் விதத்தில் எமது போராட்டங்களை ஆரம்பிப்போம்.

No comments

Powered by Blogger.