Header Ads



ரஞ்சனை விடுவிக்கும் போராட்டம் ஓயவில்லை, பதவிகளை அள்ளி வழங்கினார் சஜித்


ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரஜாவுரிமையோ, அரசியல் செய்யும் உரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ இன்னும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஓரளவு விடுதலையே வழங்கப்பட்டுள்ளதாகவும் அது அரசியலமைப்பின் 34 வது உறுப்புரையின் 1ஈ பிரகாரம் வழங்கப்பட்டுள்ள விடுதலை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன்பிரகாரம் அவர் சிறையில் கழிக்க வேண்டிய எஞ்சிய காலம் மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


34 வது உறுப்புரையின் இரண்டாவது பிரிவின் கீழ் அவருக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்றாலும் அது நடக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், .ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண விடுதலை வழங்குமாறு ஜனாதிபதிக்கு தயவுகூர்ந்து நினைவூட்டுவதாகவும் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில், ரஞ்சன் ராமநாயக்கவை இன்னும் பாராளுமன்ற உறுப்பினராகவே கருதுவதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பதாகவும், அவருக்கு பாராளுமன்றக் குழுவின் நிரந்தர உறுப்புரிமையும், நிறைவேற்றுக் குழுவின் நிரந்தர உறுப்புரிமையும் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படுவார் என்றும், இத்துடன் நிற்காது ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண விடுதலைக்கு ஆகக்கூடிய அர்ப்பணிப்பை மேற்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் நிகவரெட்டிய தொகுதிக் கூட்டம் இன்று (27) நடைபெற்றது. இதனை நிகவரெட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் திரு.சுமித் அத்தபத்து ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


தற்போது சர்வகட்சி அரசாங்கம் பற்றி ஜனாதிபதி பேசுகின்ற போதிலும் உண்மையில் நடப்பது ஒன்று கூடி நாட்டையே விழுங்கக்கூடிய அனைவரும் உண்ணும் அரசாங்கத்தை உருவாக்குவதே எனவும் அவர் தெரிவித்தார்.


தற்பொழுது நாட்டின் முன்பே மூன்று கடன் மரணப் பொறிகள் இருப்பதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அந்த மூன்று மரணப் பொறிகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பான எந்த வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் நாட்டுக்கு முன்வைக்கவில்லை. என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.