Header Ads



அன்பான ஜனாதிபதிக்கு - முஸ்லிம் காங்கிரஸ் கையளித்த ஆவணம்


அன்பான ஜனாதிபதி அவர்களுக்கு,

பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேசிய சர்வ கட்சிச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

ஜூலை 29, 2022 திகதியிட்ட உங்கள் கடிதம் தொடர்பில், மேற்கூறிய விடயத்தைப் பற்றிய விரிவான உரையாடலைத் தொடங்குவதற்கான உங்கள் முயற்சிகளை வரவேற்கிறோம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதையும், மேற்கூறிய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களை மீண்டும் செயற்படுத்தி அவற்றை  வலுவூட்டுவதற்கான முன்மொழிவையும் நாங்கள் மதிக்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் பின்வரும் விடயங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறது. இவற்றிற்கு தங்களிடமிருந்து சாதகமான பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம், மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டிய விடயங்களில் நாங்கள் எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பது பற்றிக் கலந்துரையாடுவதற்கான சாதகமான சூழலையும் அதுஉருவாக்கும்.

அவசரகால நிலைமையை நீக்கி, அமைதியான போராட்டக்காரர்களையும் , அவர்களின் தலைவர்களையும் குறிவைத்து கைது செய்வதையும் துன்புறுத்துவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கைதுகளில் பல தேவையற்றவை. அவை இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு பாதகமானவையாகவும், ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் அரசாங்கத்திற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்துவனவாகவும்   அமைந்துவிடும். இவ்வாறான கைதுகளில் பல நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முறையாக அமுல்படுத்துவது குறித்துக் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன என்பதும்,அவை முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை போன்றவற்றைப் பாதிக்கும் வகையிலும் அமைந்துவிடலாம் என்பதும் எங்களது கரிசனையாகும்.

பாராளுமன்றத்தில் சம்பிரதாய அமர்வின் போது தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் தாராளவாதம், சகிப்புத்தன்மை மற்றும் மதச்சார்பற்ற தேசத்தின் நோக்கத்தை அடையப்பெறுவது என்பன அவசியமாகும்.

   

       "ஒரே நாடு, ஒரே சட்டம் " என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தீவிரவாத   மதகுரு ஒருவரின் தலைமையிலான ஆணைக்குழு, அவரிடம் காணப்பட்ட  மதவெறி மற்றும் தப்பெண்ணத்திற்குப் பெயர் பெற்றது.அதன் 

பரிந்துரைகள் மூலம் சிறுபான்மைச் சமூகங்களின் விகிதாசாரத்தில் குறிவைக்கப்பட்டுள்ளது.அவர்களின் நடைமுறைகள், சமய நம்பிக்கைள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களிலான சீர்திருத்தங்கள் என்பன பற்றி அதில் விதந்துரைக்கப்பட்டவை அதிகம் ஊறு விளைவிப்பனவாகும்.அவற்றின் காரணமாக குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியும்,அதிருப்தியும் நிலவுகின்றன.


அதேபோன்றதுதான் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்காக எனக் குறிப்பிட்டு அமைக்கப்பட்ட மற்றொரு ஆணைக்குழுவின் நியமனமுமாகும்.அதனூடாக,

 எந்தவொரு சிறுபான்மை சமூகத்தினரினதும் பிரதிநிதித்துவம் இல்லாமல், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்கள் அந்த மாகாணங்களில் வசிக்கும் மக்களால் அழிக்கப்படும் அல்லது சட்டவிரோதமாக அபகரிக்கப்படும் அபாயத்தில் உள்ளன என்றவாறான தோற்றப்பாட்டை  ஏற்படுத்துவது மற்றொரு பயனற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.இது முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் அதிக  மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தொல்பொருள் திணைக்களம் உட்பட பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் சட்டத்தை மீறுவதை உறுதி செய்வதற்கு  கடுமையான சட்டங்களைக் கொண்டிருக்கின்றன. இதனை கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்களும் தமிழர்களும் முன்னைய நிருவாகத்தினால் திட்டமிட்டு சமூகங்களை துருவப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட  ஒரு முயற்சியாகவே கருதுகின்றனர். இந்த ஆணைக்குழுவின் நியமனம் மற்றும் அது ஏற்படுத்தியுள்ள அச்சங்களையும் ,கவலைகளையும் போக்குவதற்கு  தாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை மற்றும் அவை தொடர்பில் சில வழக்குகள் தொடரப்பட்ட விதம் என்பன கவனத்தில்  கொள்ளத்தக்கன. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அதேவேளையில்,  கறைபடியாத சேவைப் பதிவுகளைக் கொண்ட காவல் துறையின் முன்னாள் உயர் அதிகாரிகள் உட்பட அப்பாவி மக்கள் மீது தேவையற்ற வஞ்சத்துடன் முறைகேடாக நடவடிக்கை எடுக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு  நடத்தப்பட்ட விசாரணைகளை முறையாக மதிப்பாய்வு செய்ய முயற்சி  எடுப்பீர்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்.  தவறாகக் கையாளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆதாரங்களை மறைப்பதற்கு அல்லது திசைதிருப்புவதற்கு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்பவற்றுடன், மற்றும் சில சம்பவங்களை முறையாக விசாரிக்கத் தவறிய  காரணிகளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட மற்றும் பலர் தெரிவித்துள்ள கருத்துக்கள் நன்றாக  வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸனரான நாங்கள் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் முன்னிலையில் வைக்கப்பட்ட சாட்சியங்கள் போன்றவற்றை முழுமையாக ஆராய்ந்துள்ளதுடன், சில தடயங்கள் ஏன் சரியாக ஆராயப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக எமது கவலைகளைப் புலனாய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்ளத்  தயாராக உள்ளோம்


ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முன்பு இருந்த அதே விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும்.


இந்த வாரத்தில்  அறிவிக்கப்பட்ட சில உள்ளுராட்சி மன்றங்களின் தரமுயர்த்தலை வரவேற்கும் அதேவேளையில்,மூதூர் பிரதேச சபை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியன நகர சபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம். கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகப் பிரிவு தொடர்பில் பன்னம்பலம ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையானது தோப்பூர் பிரதேச பிரதேச சபையையும் உருவாக்குவதுடன் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் கல்முனை தமிழ்ப் பிரிவு சர்ச்சையானது அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து , இரு சமூகத்தினரின் கரிசனைகளையும் கருத்தில் கொண்டு கிராம சேவகர் பிரிவுகளின் முறையான மீள் எல்லை நிர்ணயத்தின் பின்னர் தீர்க்கப்பட வேண்டும்.


அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏனைய முக்கிய சிவில் சேவை பதவிகள் போன்ற நியமனங்களில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்டுவருவது கவலைக்குரியது. இந்த முரண்பாட்டைச் சரிசெய்யுமாறு  தங்களை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.


வடக்கு மற்றும் கிழக்கு  உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், ஆக்கிரமிக்கப்பட்ட,பயிரிடப்பட்ட நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட, பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனுக்களை ஆய்வு செய்து நியாயத்தை நிலைநாட்ட ஒரு குழுவை அமையுங்கள்.


2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் ,வன வள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, அந்த நிலங்கள் பல ஆண்டுகளாக அவர்களுக்குச் சொந்தமானவையாக அல்லது மாவட்ட  காணி  அலுவலரின் செல்லுபடியான  அனுமதிப் பத்திரம்  வழங்கப்பட்டுள்ள நிலையில்  பயிரிடப்பட்டனவாக இருக்கத்தக்கனவாக  உண்மை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது கவலைக்குரியது.


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய  உணவுப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து நிலப் பரப்புகளிலும் பயிர்ச் செய்கையை  ஊக்குவிக்கும் தங்கள் முயற்சிக்கும் அது பெரிதும் உதவும்.


நன்றி.


(ஒப்பம்) ரவூப் ஹக்கீம்,பாஉ, சட்ட முதுமாணி,

தலைவர்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.


(ஒப்பம்) நிசாம் காரியப்பர்,ஜனாதிபதி சட்டத்தரணி,

செயலாளர்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ். 


10.08.2022.

(தமிழாக்கம்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு).

No comments

Powered by Blogger.