Header Ads



தொடருகிறது துப்பாக்கிச் சூடுகள் இரவும் ஒருவர் சுட்டுக்கொலை - சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய கோரிக்கை


அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் அஹங்கம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றைய நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2

ஆங்காங்கே நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகள், பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்படும் சடலங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளது.

பகல் வேளைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகின்றமை, காலி முகத்திடல் போன்ற நாட்டின் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடங்களில் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றமை என்பன சட்டம் , ஒழுங்கிற்கு அச்சுறுத்துலாக அமையக்கூடும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேகநபர்களை கைது செய்து, மக்கள் மத்தியில் உள்ள சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 


No comments

Powered by Blogger.