Header Ads



விரட்டியடித்த ராஜபக்சவினரை மீண்டும் களத்திற்கு கொண்டுவர திட்டம்


நியாயமாக போராட்டம் நடத்துபவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த அரசு முயற்சிக்கிறது. ஜனநாயக நாட்டில் பேச்சு, ஒன்றுகூடல் மற்றும் போராட்டம் நடத்துவதற்கான சுதந்திரம் உள்ளதாகவும், ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் இலங்கையில் அந்த சுதந்திரம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, தடுப்புக் காவல் உத்தரவின் பிரகாரம் அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது அரச மிலேச்சத்தனம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அரச மிலேச்சத்தனம், அரச பயங்கரவாதம் மற்றும் அரச வன்முறைகளை முற்றாக கண்டிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டில் உள்ள எந்தவொரு மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவும் தான் முழுமையாக அர்ப்பனிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து விரட்டியடித்த ராஜபக்சவினரை மீண்டும் களத்திற்கு கொண்டுவருவதற்கு மொட்டு கட்சியினர் செயற்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த நடவடிக்கைகளுக்கு அதிகாரத்தை கைப்பற்றும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாக கொண்டு செயற்பட்ட அரசியல் தலைவர்களே ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தொகுதிக் கூட்டம் நேற்று (20) நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல பிரதான தொகுதி அமைப்பாளர் திருமதி துசிதா விஜேமான்ன இதனை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


நாட்டு மக்கள் பாரிய துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களுக்கு எவ்வித நட்டஈடுகளும் கிடைக்காத தருணத்தில்,  அமைச்சு வரப்பிரசாதங்களை யாரால் பெற்றுக் கொள்ள முடியும் என வினவிய எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ அவ்வாறான துரோக செயலுக்கு ஒருபோதும் தயாரில்லை எனவும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.