Header Ads



CID அதிகாரிகளின் காவலில் தானிஷ் அலி - பொலிஸார் வெளியிட்ட தகவல்


கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்ற தடுப்பு பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர்.

வலுக்கட்டாயமான முறையில் கைது செய்யப்பட்டதாக விமானத்திற்குள் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், பலரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நபரை கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குருணாகல் பகுதியை சேர்ந்த 31 வயதான தானிஷ் அலி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 13ஆம் திகதி தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.

கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்து அங்கு நேரலையில் தோன்றி அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளை சிறிது நேரம் இடைநிறுத்திய சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் வெளியிட்ட தகவல்

இந்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அவரைக் கைது செய்ய பொலிசார் தேடிக் கொண்டிருந்த நிலையில் தானிஷ் அலி தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வௌிநாட்டுக்குச் செல்லப் புறப்பட்டுள்ளாா்.

தோற்றம் மாற்றப்பட்டதன் காரணமாக குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் அவரை சரிவர இனம் கண்டுகொள்ள முடியாத நிலை காரணமாகவே விமானத்துக்குள் வைத்து அவரைக் கைது செய்ய நேர்ந்துள்ளது

குறித்த சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.