Header Ads



கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாக, நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு


நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம், இன்று (27) உத்தரவிட்டது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவருக்கு ஜனாதிபதி சிறப்புரிமை பொருந்தாது என்பதால், இந்த மனுக்களில் பிரதிவாதியாக அவரைப் பெயரிடவும் அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, மனுவில் பிரதிவாதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அவருக்கு எதிராக நிவாரணம் கோருவதற்கு மனுதாரர்கள் எதிர்பார்க்கவில்லை என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர, மன்றுக்கு அறிவித்தார்.

அதற்கமைய நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்குமாறு அவர் மன்றில் கோரிக்கை விடுத்தார்.  

உண்மைகளை கருத்திற்கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த தீர்மானித்ததுடன், இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும், ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி சிறப்புரைமை பொருந்தாது என்பதால் அவரை, இந்த மனுக்களில் பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மன்றில் முன்னிலையாவதற்கான நோட்டீஸைஅனுப்புமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங் மற்றும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் மற்றும் ஜெஹான் கனகரட்ன உட்பட மூன்று பல்கலைக்கழக கல்வியாளர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் நாணயச் சபை ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.


No comments

Powered by Blogger.