Header Ads

"கோத்தாபயவை அரகலய விரட்டியடித்தாலும், மாற்றீடான ஜனாதிபதியை நியமிக்க முடியவில்லை"

- விக்டர் ஐவன் -


இலங்கை தனது நாகரிகத்தின் ஒரு சகாப்தத்தை நிறைவு செய்துகொண்டு நல்லதோ அல்லது கெட்டதோ புதியதொரு சகாப்தத்தை நோக்கி நகர்கிறது என்ற கருத்தை கடந்த இரண்டு வருடங்களாக நான் முன்வைத்து வருகிறேன். பழைய முறைமை தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத அளவுக்குத் தவிர்க்க முடியாத அளவில் ஊழல்மயமாகிவிட்டது என்பதை இது குறிக்கிறது.நாடு முன்னேறுவதற்கு சமூக–அரசியல் முறைமை மற்றும் பொருளாதாரத்தின் ஆழமான மாற்றம் இன்றியமையாதது என்பதையும் இது சுட்டிநிற்கிறது.கடந்த காலத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு பொதுமக்கள் கிளர்ச்சிகள், உருவாக்குவதற்கு போராடி வரும் ஒரு புதிய முறைமையின் பிரசவ வேதனையை வெளிப்படுத்திய நிகழ்வுகளாக கருதலாம்.

மாபெரும் புரட்சிகளுடனான ஒப்பீடு

ஜுலை 9ஆம் திகதி இடம்பெற்ற எழுச்சியானது இலங்கையில் இதுவரையில் இடம்பெற்ற பாரியதொரு மக்கள் எழுச்சியாக கருதப்படமுடியும்.இது குறித்து நிஷாந்த ஜயசூரியாராச்சி எழுதிய ஒரு சிறந்த கட்டுரை சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.உலகில் வெடித்த மாபெரும் புரட்சிகளில் ஒன்றான 1789 பிரெஞ்சுப் புரட்சி ,1871 பாரிஸ் கம்யூன் புரட்சி அல்லது 1917 ஆம் ஆண்டின் மாபெரும் அக்டோபர் புரட்சி போன்றவற்றுக்கு இரண்டாம்பட்சமாகவில்லாத புரட்சிகளில் ஒன்று என்று அவர் கூறுகிறார்.அத்துடன் அதனை மாபெரும் அகிம்சை போராட்டம் என்று அவர் விவரித்துள்ளார். ஆனால் நான் அதை உணரும் விதம் அவர் பார்க்கும் விதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

ஆங்கிலப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி போன்ற மாபெரும் புரட்சிகள், அவை தோன்றிய நாடுகளில் அவற்றின் விளைவுகளை மட்டுப்படுத்தாமல், முழு மனித இனத்திற்கும் புதிய மற்றும் நிரந்தரமான பெறுமானத்தை வழங்கிய முக்கியமான நிகழ்வுகளாக கருதலாம். 1688 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆங்கிலப் புரட்சியானது சட்டம் இயற்றுவதில் பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தை ஏற்படுத்தியது.1689 ஆம் ஆண்டின் உரிமைகள் சட்டமூலம் அதன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.மக்ன கார்ட்டா, சுதந்திரத்திற்கான மாபெரும் சாசனம் 1215ஜூனில் வெளியிடப்பட்டது.மன்னரும் அவருடைய அரசாங்கமும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்ற கொள்கையை எழுத்தில் கொண்டு வந்த முதல் ஆவணம் இதுவாகும்.

இன்று நாம் அறிந்த சுதந்திரம் மற்றும் நீதிக்கான அடிப்படையாக பெரும்பாலும் மக்ன கார்ட்டா பார்க்கப்படுகிறது.உண்மையில், மக்ன கார்ட்டாவின் விளைவாக உலகம் மரபுரிமையாகச் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுகிறது.இது ‘சுதந்திரமான (ஆங்கில) மனிதனைக் கைப்பற்றவோ அல்லது சிறையில் அடைக்கவோ அல்லது அவரது உரிமைகள் மற்றும் உடைமைகளை பறிக்கவோ அல்லது சட்டவிரோதமாக்கப்படவோ அல்லது நாடு கடத்தப்படவோ, அல்லது நாட்டின் சட்டத்தின் மூலம் தீர்ப்பைத் தவிர வேறு வழியில் அவரது உரிமைகளை பறிக்கவோ கூடாது.1776 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஸ்தாபகர்கள் ஆங்கிலேய முடியாட்சியிலிருந்து தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு வரலாற்று ரீதியான முன்னோடியாக மக்ன கார்ட்டாவைக் கருதினர்.இதன் விளைவாக, அமெரிக்கப் புரட்சியின் விளைவாகக் கருதப்படும் 1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம், சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கருத்தாக்கத்தின் தோற்றமாகக் கருதப்படலாம்.

பிரெஞ்சுப் புரட்சியின் மரபு என்று கருதப்படும் 1789 ஆம் ஆண்டின் மனித உரிமைகள் மற்றும் பிரஜை பற்றிய பிரெஞ்சு பிரகடனம், மனித உரிமைகள் சட்டத்தின் கருத்தை மேலும் மேம்படுத்தவும் ஊட்டமளிக்கவும் வழிவகுத்தது.1948 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித மற்றும் சிவில் உரிமைகளின் வரலாற்றில் ஒரு அடிப்படை அம்சமான மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம், 1776 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் மற்றும் 1789 இன் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் தொடர்பான பிரெஞ்சு பிரகடனத்தின் உச்சமாக கருதப்படலாம்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தை உலகில் தோன்றிய மிகப்பெரிய அகிம்சை இயக்கமாக கருதமுடியும்.இது 1857 முதல் 1947 வரை நீடித்தது, இறுதியில் வரலாற்றில் அகிம்சை வழியிலான வெகுஜனப் போராட்டங்களின் மூலம் உலகின் மிக சக்திவாய்ந்த காலனித்துவப் பேரரசின் தோல்விக்கு வழிவகுத்தது. இலங்கையில் ஜூலை 9 ஆம் திகதி ஏற்பட்ட பொதுமக்கள் கிளர்ச்சியானது எமக்கு மிகவும் முக்கியமானதாக இருந்த போதிலும், அதனை உலகின் மிகப் பெரிய புரட்சிகளுடன் ஒப்பிட்டு அவற்றை மிகப் பெரியதாகக் கருதுவது விவேகமானதல்ல .

ஜூலை 9 புரட்சி

இந்த வார்த்தையானது முழுமையான அர்த்தத்தை கொண்டிராவிட்டாலும், இலங்கையில் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் கிளர்ச்சியை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட புரட்சியாக கருதமுடியும்.அத்துடன் இலங்கையில் இதுவரை வெடித்துள்ள மிகப்பாரிய மக்கள் எழுச்சியாக இதனை நிச்சயமாகக் கருதலாம். இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தினர் செலுத்தி வந்த ஆதிக்கத்தை குறைத்து, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் செல்லும் சூழ்நிலையை ஏற்படுத்தியதில் அது ஏற்படுத்திய தாக்கத்தை மிக முக்கியமான விளைவு என்று கூறலாம்.வெளிப்படையாக, கோத்தாபயவை வீட்டுக்கு அனுப்புவதே இளைஞர் எழுச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.ஆனால் இந்த நோக்கத்திற்கு அப்பால் சென்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலை எழுச்சிக்கு தலைமை தாங்கிய சில அமைப்புகள் கொண்டிருந்தன என்பது புலனாகிறது.

பிரெஞ்சுப் புரட்சியின் கிளர்ச்சியாளர்கள் பிரான்சின் கிழக்குப் பகுதியை பாதுகாத்த கோட்டையான பாஸ்டில்லைக் கைப்பற்றியிருந்தனர் .அதேபோல்,இலங்கைப் போராட்டக்காரர்களாலும் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதி ,வாசஸ்தலம் , அலரிமாளிகை மற்றும் பிரதமரின் அலுவலகம் உட்பட பல இடங்களை கைப்பற்ற முடிந்தது.நிராயுதபாணியான சக்திவாய்ந்த பொதுமக்கள் எழுச்சியானது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தை அகற்றும் திறனைக் கொண்டிருக்கலாம், ஆனால் அதேநேரத்தில், அதிகாரத்தை கைப்பற்றும் திறனைக் கொண்டிருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டுமானால்,அரசியல் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் நடைபெறும் புரட்சியாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் பாராளுமன்றத் தேர்தலின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரதான பிரச்சினைக்கு தெளிவானதும் நடைமுறை ரீதியானதுமான பார்வை இல்லாததுதான் போராட்டத்தின் உயிர்வாழ்வையும் முன்னேற்றத்தையும் பாதித்த மிகப்பெரிய காரணியாகக் கருதலாம்.இந்த வெகுஜன எழுச்சியில் ஈடுபட்டுள்ள அமைப்புகள், தெளிவான பொதுவான நோக்கத்துடன் நன்கு பிணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த இயக்கமாக தங்களை உருவாக்கிக்கொள்ளவில்லை.மேலும் தெளிவான யதார்த்த நோக்கு இல்லாத தன்மைக்கு அப்பால் அதிகளவில் வலுவான மாற்றுத் தலைவர்கள் இல்லை.

திறமையான தலைவர்களாகக் கருதப்படும் உலக வரலாற்றின் சில மகத்தான பாத்திரங்கள் நெருக்கடியான காலங்களில் தோன்றியிருக்கிறார்கள்.ஒலிவர் குரோம்வெல் (1599-1658) ஜோர்ஜ் வாஷிங்டன் (1599-1651) நெப்போலியன் போனபார்ட் (1769-1821), வி.ஐ. லெனின் (1870-1924) மற்றும் மகாத்மா காந்தி (1869-1948) போன்றவர்களை அதனை நிரூபிப்பதற்கான உதாரணங்களாக குறிப்பிடலாம்.இந்த ஐந்து தலைவர்களும் நம்பமுடியாத அளவுக்கு தைரியம், தன்னம்பிக்கை, கடினமான சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன் மற்றும் திறமையானவர்களை தங்களுக்கு வேலை செய்ய வைக்கும் திறமை ஆகியவற்றைக் கொண்டிருந்தனர்.இலங்கையில் நடந்த இந்தப் போராட்டத்தின் போது மாற்றீடான மற்றும் திறமையான தலைவர்கள் உருவாக இடமில்லை.அப்படிப்பட்டவர்கள் வெளிப்பட்ட அரிதான நிகழ்வுகளில் கூட, அவர்களைத் தலை நிமிர்ந்து முன்னுக்கு வர விடாமல் நசுக்கும் ஒரு தீங்கான முறைமையே செயற்பட்டது.

எனவே,போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மாற்றீடான தலைவர்கள் இல்லாத நிலையில்,அதிகாரத்திலிருந்த ஊழல் தலைவர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயம் எழுச்சிப் போராட்டக்காரர்களுக்கு ஏற்பட்டது.ஏற்கனவே குறிப்பிட்டது போல் தெளிவான விதத்தில் நடைமுறைத் தன்மையான பார்வை இல்லாதமை இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய பலவீனம் என்று சொல்லலாம்.அதிகாரத்தைப் பெற வேண்டுமானால், அது தேர்தல் மூலமாகவோ அல்லது பொருத்தமான புரட்சி மூலமாகவோ அடையப்பட வேண்டும்.அவர்கள் முறைமையில் மாற்றத்தை விரும்பினால், அவர்கள் பொருத்தமான மறுசீரமைப்பு திட்டத்திற்காக முன்வர வேண்டும்.இதன் விளைவாக அவர்களால் ஜனாதிபதி கோத்தாபயவை அவரது பதவியிலிருந்து வெளியேற்ற முடிந்தது.ஆனால் அவருக்குப் பதிலாக அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றீடான ஜனாதிபதியை நியமிக்க முடியவில்லை.


ஆட்சியாளர்களை விரட்டியடிக்க அரகலயாவுக்கு போராட்டத்திற்கு ஒரு வழிமுறை உள்ளது.ஆனால் அதற்கு ஏற்புடையதாக புதிய ஆட்சியாளர்களை நியமிக்கும் முறை இல்லை.இத்தனைக்கும், ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் வியூகம் விரைவில் மக்களை சோர்வடையச் செய்யும் செயலாக மாறலாம்.

இப்போராட்டத்திற்கு பொதுமக்களின் வரவேற்பு தற்போது வலுவானதாக இல்லை. இது தாழ்ந்த மட்டத்தில் உள்ளது.போராட்டக்காரர்களுக்கு இடையே உள்ள உள்முரண்பாடுகள் பொதுமக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.இது அவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளது. வழமையான மற்றும் பழைய தலைவர்களால் மக்கள் சோர்ந்து போயிருந்தாலும், அவர்களுக்குப் பதிலாக திறமையான மாற்றுத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவதில் அரகலயா வெற்றிபெறவில்லை. அரகலய கடைப்பிடித்த உத்தி பொதுமக்களின் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரகலய மக்களால் பயன்படுத்தப்படும் மொழியும், அகிம்சையின் உணர்விற்குப் பொருந்தாத ஒரு மோசமான, நாகரிகமற்ற தொனியைப் பெற்றதாகத் தெரிகிறது. ஒரு அமைதியான போராட்டம் அத்தகைய நிலைக்குத் தள்ளப்படும்போது,அதற்கு எதிராகப் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு அழிவுகரமான இயக்கமாக மாறும் போக்கு உள்ளது.

அரகலய போர்க்குணமிக்க தோற்றத்துடன் இருந்தாலும், அது ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் விழுவதைத் தவிர்க்கவும், தற்போதைய குழப்பமான பாதையில் இருந்து விலகி,தோன்றிய பாதையில் அதை இயக்கினால், அதன்மூலம் ஊழல் மற்றும் தீங்கான முறைமையிலிருந்து ஆழமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் சக்திவாய்ந்த கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கான பயனுள்ள பாதையில் அதனை செலுத்த முடியும்.இத்தகைய சீர்திருத்தத் திட்டத்தின் மூலம் மட்டுமே, ஊழல் மற்றும் அழிவுகரமான தற்போதைய முறைமையில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வந்து,அதை உண்மையிலேயே பாரியதொரு மாற்றமாக மாற்றுவதற்கு முடியும்.

பினான்சியல் டைம்ஸ்

No comments

Powered by Blogger.