Header Ads



ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சி கொழும்பில் பிரவேசிக்க தடை - நீதிமன்றம் உத்தரவு


கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க துறவிகள், சர்வ மத குருக்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள் அடங்கிய பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதன்படி, ‘சுரகிமு லங்கா’ தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசத் அறக்கட்டளையின் ஸ்தாபகர் களுபோவில பதும தேரர் தலைமையிலான குழுவினருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நபர்கள் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கெட் மாவத்தை, ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக அல்லது புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேறு எந்த இடத்திற்குள்ளும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை - ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய, புதுக்கடை நீதிமன்றம் இந்த தடை உத்தரவை விதித்துள்ளது.

இதன்படி, குறித்த நபர்கள் மேற்குறிப்பிட்ட எந்த இடத்திலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவும் வாகனங்களை மறிக்கவும் தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை மீறுவது இலங்கை தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகும் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.