Header Ads



சமூக நல்லுறவுக்கான எனது, அர்ப்பணிப்பு தொடரும் - Dr ஷாபி


 - ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் -


இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருடிக்கடி நிலையில், தனது சம்பள நிலுவைப் பணத்தில் மருந்து கொள்வனவு செய்து, வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளித்தல் எனும் திட்டமானது, சிறந்த முன்னுதாரணம் என சிங்கள சமூகத்தைச் சேர்ந்ததவர்கள் தமக்கு கூறியதாக வைத்தியர் ஷாபி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

வட்ஸப் மூலமாக ஜப்னா முஸ்லிம் இணையம், தொடர்பு கொண்ட போது வைத்தியர் ஷாபி, தெரிவித்த கருத்துக்களை இங்கு ஜப்னா முஸ்லிம் இணைய வாசகர்களுக்காக சுருக்கித் தருகிறோம்.

எனக்குக் கிடைத்த சம்பள நிலுவை காசோலையை, நான் அப்படியே மருந்துக் கொள்வனவுக்காக வழங்கவுள்ளதாக தகவல் பரவுகிறது. இது தவறானது. எனக்குக் கிடைத்த காசோலையை நான் அப்படியே வழங்கத் தீர்மானிக்கவில்லை. அந்தக் காசோலை மூலம் கிடைக்கப்பெறும் பணத்தைக் கொண்டு, தேவையான மிக அத்தியாவசியமான மருந்துகளை கொள்வனவு செய்வேன். அந்த மருந்துகளை நானே, சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளேன். அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன்.

நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு 3 வருடங்களுக்கு முன் என்னைத் தெரியாது. எனினும் நான் தவறு செய்திருக்க மாட்டேன், இனவாதம், மதவாதம் மற்றும் பாரபட்சம் மூலம் எனது மருத்துவ சேவைகளை வழங்கியிருக்க மாட்டேன் என முஸ்லிம்களில் 100 சதவீதமானவர்கள் நம்பினார்கள், மாற்றுமத சமூகங்களில் உள்ள தூய்மையான உள்ளம் கொண்டவர்களும், நான் தவறு செய்திருக்க மாட்டேன் என நம்பினார்கள்.

இப்போது பாருங்கள், நான் நிரபராதி என விடுதலையாகியுள்ளேன். எனது சம்பளப் பாக்கி திருப்பி கிடைத்துள்ளது. அதனையும்  மருந்துக் கொள்வனவுக்காக ஒதுக்கியுள்ளேன்.

இது எனது வெற்றியல்ல, நமது சமூகங்களுக்குக் கிடைத்த வெற்றி. எனது கைது, எனக்கெதிரான பிரச்சாரங்கள் தேர்தலின் போது துரும்புச் சீட்டாக பயன்படுத்தப்பட்டது.  இப்போது நான் நிரபராதி ஆகியுள்ளேன். இதற்காக 3 வருடங்கள் சென்றுள்ளது. இனவாதமாற்ற நாடே, எமக்கு முக்கியமானது. அதற்காக என்னை அர்ப்பணிப்பேன்.


நளீம் ஹாஜியார் நெருக்கடியான நேரத்தில் நாட்டுக்காக தனது பங்களிப்பை நல்கினார், ஒரு வைத்தியரான நான், இனவாத போலி பிரச்சாரங்களால் பாதிப்படைந்த நான், இலங்கையின் தற்போதைய நெருக்கடியான கட்டத்தில் என்னால் முடிந்த, பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளேன்.


இனவாதமற்ற நாட்டை நான் நேசிக்கிறேன். இன நல்லுறவு எமக்கு பிரதானமானது எனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தமது கருத்துக்களை பகிர்ந்த கொண்டார் வைத்திய சாபி.

No comments

Powered by Blogger.