Header Ads



இரும்பு இதயம் கொண்ட ரணில், சவாலை எதிர்கொண்டு வருகின்றார்.


 இரும்பு இதயம் படைத்த ஒருவரால் மட்டுமே நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையை சமாளித்து மீட்டெடுக்க முடியும். அவ்வாறான பணியொன்றையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலையத்தில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

சர்வதேச நாடுகளின் ஆதரவை முழுமையாக இழந்திருந்த இலங்கைக்கு இன்று மீண்டும் சர்வதேச உதவிகள் கிடைத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடிகள் மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாதிருந்த நிலையில் இன்று பலமான நாடுகளின் ஆதரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்று வருகின்றார். அதில் முக்கிய வெற்றிகள் சில எமக்கு கிடைத்துள்ளன. எனினும் இவ்வாறான நிலையிலும் ஒரு சிலர் ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்து வருகின்றனர். 

இவ்வாறான நெருக்கடி நிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை பெற்றிருக்காதிருந்தால் நாடு பாரிய நெருக்கடிக்குள் வீழ்த்திருக்கும். பிரதமர் பதவியை, நிதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்த வேளையில் எவரும் அதனை ஏற்றுக்கொள்ளாது பின்வாங்கிவிட்டு, இன்று பிரதமர் ரணிலை விமர்சித்துக்கொண்டுள்ளனர். இரும்பு இதயம் படைத்த ஒருவரால் மட்டுமே இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும். அவ்வாறானதொரு சவாலையே ரணில் எதிர்கொண்டு வருகின்றார். 

ஐக்கிய நாடுகள் சபை, அதன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், சர்வதே நாடுகளின் தலைவர்கள்,பலர் இலங்கை குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அமெரிக்கா நிதி உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உதவிகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றது.சீனாவின் ஒத்துழைப்புகளும் கிடைத்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பின் பின்னர் உடன்படிக்கைகளை செய்துகொள்ள முடியும். ஆகவே நாட்டைன் இன்றைய நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.