Header Ads



'வரி அதிகரிப்பானது இலங்கையர்களை, பட்டினிச் சாவுக்கு கொண்டு செல்லும்' - பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன்


உள்நாட்டு இறைவரிச் சட்டம், பெறுமதி சேர் வரி சட்டம், தொலைத்தொடர்பு வரி சட்டம், பந்தயம் மற்றும் விளையாட்டு வரி சட்டம், நிதி முகாமைத்துவ சட்டம், தனிநபர் வருமான வரி சட்டம், பன்னாட்டு வருமான வரி அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் பல வரி சட்டங்கள் திருத்தப்படவுள்ளன.

இந்த வரி திருத்தங்கள் பொதுமக்கள் வாழ்க்கையில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும் என்பது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் கருத்து வெளியிட்டார்.

''நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல், பண வீக்கம், வாழ்க்கை செலவோடு ஒப்பிடும்போது, இந்த வரி அதிகரிப்பானது, மக்களுக்கு மேலதிக சுமையாகவே இருக்கும் என்று நான் பார்க்கின்றேன். வாழ்க்கை செலவு 300 மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை 300 மடங்கு அதிகரித்திருக்கின்றது. பொருட்களுக்குத் தட்டுப்பாடு, மாதாந்தம் சம்பளம் எடுக்கின்றவர்களுக்கு அவர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. அன்றாட தொழில் செய்பவர்களுக்கு வருமானம் இல்லை.''

''பெரும்பாலான வணிக நிறுவனங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மூடியுள்ளனர். லாபத்தை எட்டுவதை விட, செலவை கூடு ஈடு செய்ய முடியாத நிலைமையில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிலைமையில் அரசாங்கம் வரியை கூட்டியிருப்பதற்கான ஒரேயொரு காரணம் என்னவென்றால், அரசாங்கத்தின் வருமானத்தை ஈடு செய்து கொள்வதற்காக வரும் மாதங்களில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குக் கூட பணம் இல்லை என பிரதமர் அண்மையில் கூறியிருந்தார். ஆகவே நிதிப் பற்றாக்குறையை தீர்த்துக் கொள்ளவே அரசாங்கம் இதைச் செய்திருக்கிறது," என பேராசிரியர் கூறினார்.

''சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரி அதிகரிப்பானது, இலங்கை மக்களை பட்டினி சாவுக்குக் கொண்டு செல்லும்'' என அவர் கூறுகிறார்.

''பொருட்களின் விலைகள் மீண்டும் 60 - 70 சதவிகிதம் அதிகரிக்கும். வரி விதிப்பை வர்த்தகர்கள், பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் மீதே சுமத்துவார்களே தவிர, அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகவே பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.

அரிசி விலை கிட்டத்தட்ட 400 ரூபாய்க்கு போகக்கூடிய நிலைமை ஏற்படும். இந்த வரி அதிகரிப்புக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையே பிரதான காரணம். சர்வதேச நாணய நிதியம் கொடுத்த 3 நிபந்தனைகளில் இதுவும் ஒன்று.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் மக்கள் மீது இந்தச் சுமையை சுமத்துகின்றது. வரி அதிகரிப்பு மாத்திரம் அல்லாமல், சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொண்டால், அந்த கடனைச் செலுத்தும் சுமையும் மக்கள் மீதே சுமத்தப்படும். ஆகவே இலங்கை தொடர்ந்தும் கடன் நச்சு வட்டத்திற்குள் சுழல்வதற்கும் வருமான பற்றாக்குறை நச்சு வட்டத்திற்குள் சுழல்வதற்கும் இது காரணமாக இருக்கும். மேன்மேலும் மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதன் ஊடாக, மக்களை பட்டினி சாவு நிலைமைக்குக் கொண்டு செல்ல இது வழி வகுக்கும்," என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் குறிப்பிடுகின்றார். BBC

No comments

Powered by Blogger.