Header Ads



ரணில் பதவியேற்று ஒருமாதம் ஆகியும் முன்னேற்றம் இல்லை - சம்பிக்க


ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பிரதமர் பதவியை ஏற்க எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அதனை நான் பெருமையாக கருதுகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  

ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் ராஜபக்ச குடும்பம் வெளியேறினால் நாட்டைக் கொண்டு நடத்த முடியும் என்று பதில் கூறினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

நான் எந்த ஒரு அமைச்சையும் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நிதியமைச்சுக்கு செயற்பாட்டு ரீதியான ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். நிதி அமைச்சைக் கொண்டு செல்வதுதான் நாட்டின் மிகவும் கடினமான பணி.

ஆனால் எனக்கு இந்த விடயத்தில் அனுபவம் இருக்கின்றது. காரணம் நான் நிர்வகித்த ஒரு அரச நிறுவனமும் நட்டம் அடையவில்லை. ஆனால் ஜனாதிபதி பிரதமர் தரப்பில் இருந்து தடைகள் வந்தால் அதனைக் கொண்டு நடத்த முடியாது 

தற்போதைய நிலைமையை சற்று பாருங்கள். ரணில் பதவியேற்று ஒரு மாதம் ஆகின்றது. ஆனால் முன்னேற்றம் இன்னும் இடம்பெறவில்லை. நான் அந்த இடத்திற்கு சென்றாலும் இந்த நிலைமைதான் ஏற்படும்.

ராஜபக்ச வெளியேற வேண்டும். அவ்வாறு அவர்கள் சென்ற பின்னர் இந்த நாடு ஜனநாயகமானது என்று உலகத்திற்கு தெரியவேண்டும்.

மக்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை வரவேண்டும். வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் கூட எமது நாட்டுக்கு டொலர்களை அனுப்புவதில்லை. அந்தளவுக்கு நிலைமை மோசமாக மாறியுள்ளது.

தற்போது நாட்டு நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. மக்களுக்கு இருக்கும்  இந்த பிரச்சினை அப்படியே எங்களுக்கும் இருக்கின்றது.

எரிபொருள் இல்லாததால் பயணங்கள் செல்ல முடியாமல் உள்ளது. பல மாதங்களாக கொழும்புக்கு வெளியே செல்லவில்லை. மின்சார பிரச்சினை இருக்கின்றது. இது தொடர்பாக என்னிடம் பலர் கேள்வி கேட்கின்றனர்.

நான்தான் 2010ஆம் ஆண்டு முதன்முதலாக சோலார் சூரிய ஒளி மின்சார உற்பத்திக் கருவியை பொருத்தி அதனை முன்னெடுக்குமாறு கூறினேன்.

மறுபுறம் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை. பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தேட வேண்டியுள்ளது. அதுவும் தற்போது பாரிய அளவில் விலை அதிகரித்திருக்கின்றது. 20 இலட்சத்தில் இருந்த மின்சாரத்தில் ஓடக்கூடிய ஒரு கார் தற்போது 86 லட்சம் 90 லட்சத்திற்கும் உயர்ந்துவிட்டது. வீட்டில் சிறிய பகுதியில் மரக்கறி பயிர் செய்கைகளை மேற்கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.