Header Ads



எங்கே வெடிக்கப் போகின்றதோ தெரியவில்லை, ரணிலினால் முடியவில்லை, திட்டியவர்களே இப்போது பிரதமராக ஏற்றுள்ளனர்


ஜனாதிபதி  அரசாங்கத்தின் தலைமை ஆசனத்தில் இருக்கும் வரையில் சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவே ஜனாதிபதி தாமதிக்காது தீர்மானத்தை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்துள்ளார். 

பிரதமரின் பாராளுமன்ற உரையானது  முடியாமையின் வெளிபாடாகவே இருந்தது எனவும், அரசாங்கத்தினால் பிரச்சனைகளை கூற முடிகின்றதே தவிர, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்க முடியவில்லை என்றும் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற, நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே  இன்றுள்ள பிரதான பிரச்சனையாக  காணப்படுகின்றது.. 16 ரூபாவிற்கு இருந்த முட்டையின்  விலை 50 ரூபாவாக அதிகரித்துள்ளது. அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன. 

இப்போது விலை கட்டுப்பாடு இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் தொடர்பில் பிரதமர் இங்கே உரையாற்றினார். முடியாமையின் வெளிப்பாடே அது. அசாங்கம் பிரச்சனைகளை கூறுகின்றது. ஆனால் அதனை தீர்க்க வேலைத்திட்டங்கள் இல்லை. 

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரை மொட்டுக் கட்சியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். நான்கரை வருடங்களாக அவரையே திட்டித்தீர்த்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை இப்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பிரதமரின் உரையில் பிரச்சனைகள் தொடர்பில் கூறினர். ஆனால் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமரின் உரையில் எதுவும் முன்வைக்கப்படவில்லை.  நாட்டை கட்டியெழுப்பும் வழிகளை அரசாங்கம் இன்னும் முன்வைக்கவில்லை. நாங்கள் வெளிநாடுகளிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள முன்னர் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள முடியாது போயுள்ளது. இதற்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஜனாதிபதியே தலைவராக இருக்கின்றார். 

இந்த தவறுகளுக்கு காரணமானவர் அவரே. அதனாலேயே மக்கள் நம்பிக்கை இன்றி இருக்கின்றனர். இதனால் அவர் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அவர் தலைமை ஆசனத்தில் இருக்கும் வரையில் சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள முடியாது.

சர்வதேசம் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதனை செய்யாது சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது. மொட்டுக் கட்சிகளின் எம்.பிகளுக்கு இது புரியாது. சர்வதேசம், 19 ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள். இல்லையென்றால் நிறைவேற்று ஜனாதிபதி விலகி அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க வேண்டும் என்றே கூறுகின்றனர். இதனை செய்ய வேண்டும். இப்போதுள்ள நெருக்கடி நிலைமை எதிர்வரும் மாதங்களில் எங்கே வெடிக்கப் போகின்றதோ தெரியவில்லை என்றார்.


பா.நிரோஸ்


No comments

Powered by Blogger.