Header Ads



ரணில் மீது சுமந்திரன் தாக்குதல் - ராஜபக்சக்களின் தர்பார் அவுட்டாகாமல், மூச்சு வாங்க இடமளித்ததாகவும் குற்றச்சாட்டு


 "நாட்டைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கடித்த ராஜபக்சக்களின் தர்பார் முற்றாக 'அவுட்' ஆகும் நிலையிலிருந்தது. அதற்குள், அறிவற்ற முறையில் இடையில் புகுந்து, அவர்கள் மூச்சு வாங்குவதற்கு நேரம் பெற்றுக்கொடுத்து, ராஜபக்சக்களின் அதிகாரத்தைக் காப்பாற்றித் தக்கவைக்க வழிசெய்தவர் ரணில் விக்ரமசிங்கதான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த விடயங்களை விவரித்திருக்கின்றார்.

அந்தப் பேட்டியில் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

"ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்ட இந்தப் பிரதமர் பதவியேற்பு சவாலை அறிவுள்ள வேறு எவருமே செய்திருக்கமாட்டார்கள். செய்ய முன்வந்தும் இருக்கவில்லை. உண்மையில் அவர் (ரணில்) செய்த விடயம் என்னவென்றால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடிக்கு மத்தியில் நின்று மூச்சு விடுவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தமைதான்.

அதன்மூலம் அவர்கள் மீண்டும் தங்களை - தங்கள் அணியை ஒழுங்குபடுத்திக்கொண்டு வந்துள்ளார்கள். ரணிலின் நடவடிக்கையால்தான் மகிந்த ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வர முடிந்திருக்கின்றது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களைத் தாக்குவதற்குக் குண்டர்களை ஏவி விட்டுவிட்டு, இப்போது அவர்களை (காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை) பார்த்து உங்கள் கைகளிலும் இரத்தக்கறை இருக்கின்றது என்று அவர் நாடாளுமன்றத்தில் சுட்டு விரல் நீட்டும் வாய்ப்பை ரணில்தான் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

இன்றைய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்குக் கடந்து வந்த முன்னைய அரசாங்கங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் காரணம் என்றாலும் மிக மோசமான நிலைமை ஏற்பட்டமைக்கு இப்போதைய ஆட்சிப்பீடம் தான் முக்கிய காரணம்.

அது மக்களாலும் உணரப்பட்டுள்ளது. அதனால்தான் பிரதமர், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரிச் செயலாளர் எல்லோரும் பதவி விலக வேண்டி வந்தது. பெரும் தவறுகள் - குற்றமிழைத்தவர்கள் பதவியிலிருந்து விலகித்தானாக வேண்டும்.

ஆனால், மிக விநோதமான விடயம் என்னவென்றால் குற்றமிழைத்தவர்கள் - இரண்டாவது மட்டத்தில் இருக்கின்றவர்கள் பதவி விலகி விட்டார்கள். ஆனால், பிரதான நபர் - தவறுகள் இழைக்கப்பட்டமைக்கு முழுப் பொறுப்பான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னமும் பதவியில் இருக்கின்றார்.

அவர் அப்படிப் பதவியில் இருப்பதற்கு அவருக்கான அந்த இடத்தை - வாய்ப்பை அவர் வெளியேறாமல் பதவியைத் தொடர்வதற்கான இடைவெளியை ப் பெற்றுக்கொடுத்தவர் ரணில்தான். நிபந்தனை எதுவும் விதிக்காமல் பிரதமர் பதவியை ஏற்று, அந்த இடைவெளியை ஜனாதிபதிக்கு அவர் பெற்றுக்கொடுத்து, அவர் பெரும் தவறிழைத்திருக்கின்றார்.

தமக்கு அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளை இனிமேலும் மக்கள் ஆணையாகக் கருத முடியாது என்ற நிலைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே வந்திருந்தார்.

அவர் பதவியைத் துறந்து அல்லது கையளித்து அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்து ஓர் ஒழுங்குக்கு வருவதற்கு இடையில் எந்த முன் நிபந்தனைகளையும் இல்லாமல் இடையில் புகுந்து பிரதமர் பதவியை ஏற்று ரணில் குழப்பி விட்டார். இப்போது பதவியை - அதிகாரத்தை விட விருப்பமில்லாமல் அவர் அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார் கோட்டாபய.

தவிரவும், அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் செய்த பல விடயங்கள் - தவறுகள் மூடி மறைக்கப்பட வேண்டும், அதற்கு அதிகாரத்தில் இருப்பதே ஒரே வழி என்பதால் அதிகாரத்தைப் பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். TW

1 comment:

Powered by Blogger.