Header Ads



என்னை கைது செய்வதை, தடுத்து நிறுத்துங்கள் - நீதிமன்றத்தை நாடினார் ஜோன்ஸ்டன்


காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த மைனா கோகம ஆகியவற்றில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, சந்தேகநபராகக் கருதப்படும் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின்  ஆலோசனைக்கு அமைய தன்னை சந்தேக நபராக பெயரிட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், தன்னைக் கைது செய்ய தயாராகி வருவதாகவும்  தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னைக் கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளார்.

குறித்த மனுவில், பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் உட்பட சிலர் பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் கடந்த 1ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போது, சீ.ஐ.டி சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மைனகோகமவில் போராட்டக்காரர்களை தாக்குவதற்கு மக்களைத் தூண்டும் வகையில் உரை நிகழ்த்தியதாக மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

சாட்சியங்களை ஆராய்ந்ததன் பின்னர், ஜோன்ஸ்டன் எம்.பி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட மேலும் மூவரை சீ.ஐ.டியினர் சந்தேகநபர்களாகப் பெயரிட்டுள்ளனர் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.