Header Ads



1500 டொலரை வெளிநாட்டில் இருந்து, வைப்பிலிட்டால்தான் ஹஜ்ஜுக்கு போகலாம் - இலங்கையில் நிபந்தனை விதிப்பு



இம்முறை புனித ஹஜ் கடமைக்காக ஹஜ்ஜாஜிகளை அனுப்புதற்கு மீண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக இம்முறை ஹஜ் கடமைகளுக்கு இலங்கையில் இருந்து ஹஜ்ஜாஜிகளை அனுப்பாமல் இருக்க அண்மையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (07) நடைபெற்ற கலந்துரையாடலில் அந்த தீர்மானம் மாற்றப்பட்டு, மீண்டும் ஹஜ்ஜாஜிகளை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

சவுதி அரசாங்கத்தில் இருந்து இம்முறை 1585 பேருக்கு புனித ஹஜ் கடமைக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு ஹாஜிகளும் 1500 டொலரை குறிப்பிட்ட ஒரு கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து கொண்டுவர வேண்டும் எனவும் அதன் பின்னர் மத்திய வங்கியின் பொறிமுறையூடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தெரிவித்தார்.

உள்நாட்டு கணக்குகள் மூலம் பணத்தை பரிமாற்ற முடியாது எனவும் வௌிநாடுகளில் இருந்து டொலர் வைப்பில் இடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டொலரை அவர்களுக்கு நேரடியாக கொண்டுவர முடியும் எனவும் இல்லாவிட்டால் அவர்கள் பயணிக்கும் முகவர்கள் ஊடாக கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறினார்.

இந்த நடைமுறை மூலம் முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டது.



No comments

Powered by Blogger.