நாட்டில் வறுமையும், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் அபாய நிலை --IMF பேச்சு வெற்றிபெற்றால் மட்டுமே பொருளாதார மீட்சி
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அதனுடனான செயற்திட்டம் வெற்றியளிக்குமேயானால், அடுத்த வருடமளவில் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடையும் என்று எதிர்பார்க்க முடியும் என தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இருப்பினும் பணவீக்கமானது 30 - 40 சதவீதமாகவே தொடர்ந்து காணப்படும். அதனை மத்திய வங்கியினால் குறைக்கமுடியாது.எனவே இதன் விளைவாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைய நேரும் என்பதுடன், மேலும் பலர் வறுமைக்குத் தள்ளப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு கடன்களை மீளச்செலுத்த முடியாமல் மிகமோசமாக முறிவடைவதைத் தடுப்பதற்காக கடன்மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வெளியிட்டது.
அதன்படி கடன்வழங்குனர்களுக்குரிய கடன் மீள்செலுத்துகைகளை உரியவாறு மேற்கொள்ள முடியாத நிலையிலிருப்பதாகவும், அதற்கு மேலும் காலஅவகாசத்தையும் கடன்நிவாரணங்களையும் வழங்குமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதேவேளை இறக்குமதிகள் மூலமான செலவினங்கள் ஏற்றுமதிகள் மூலமான வருமானத்தை விடவும் உயர்வாகக் காணப்படுகின்றது.
அடுத்ததாக எரிபொருள், எரிவாயு உள்ளடங்கலாக நாளாந்தம் தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான காரியமாக மாறியிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவிடமிருந்து கடனுதவி அடிப்படையில் ஒரு மில்லியன் டொலர், 500 மில்லியன் டொலர் மற்றும் மேலும் 500 மில்லியன் டொலர் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நிதியுதவிகள் மூலம் இறக்குமதிகளுக்கு அவசியமான நிவாரணங்களை மத்திய வங்கியினால் ஓரளவிற்கு வழங்கமுடியும்.
அதுமாத்திரமின்றி அவசர நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் விநியோக நடவடிக்கைகளில் காணப்படும் சிக்கல்களைக் குறைப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள சுமையை ஓரளவிற்குக் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அடுத்த 6 ,- 7 மாதங்களுக்குள் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தமுடியும். இருப்பினும் பணவீக்கமானது 30 -, 40 சதவீதமாகவே தொடர்ந்து காணப்படும். அதனை மத்திய வங்கியினால் குறைக்கமுடியாது.
எனவே இதன் விளைவாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைய நேரும் என்பதுடன், மேலும் பலர் வறுமைக்குத் தள்ளப்படுவர். அதனை முன்னிறுத்தி மத்திய வங்கி பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும்போது அரசாங்கம் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கமுடியும்.
குறைந்தளவு வருமானம் பெறுவோருக்கு அவசியமான நிவாரணங்களை வழங்குவதற்கு உலகவங்கி முன்வந்திருக்கின்றது. எதுஎவ்வாறெனினும் வறுமைநிலை கூடும் என்பதுடன், வேலைவாய்ப்பையின்மையும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
Post a Comment