Header Ads



அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி வெற்றி - மாற்றமடையப் போகும் இலங்கை குடும்பத்தின் நிலை


தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது.

தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King நேற்று மீண்டும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

அவர்களை அவர்களின் சொந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு காலம் செல்லும் என்பதை கூற முடியாது எனவும் ஆனால், கட்டாயம் தொழிற்கட்சி அரசாங்கம் அதற்கு முன்னுரிமை வழங்கும் எனவும் Madeleine King கூறியுள்ளார்.

முருகப்பன் குடும்பத்தை நேசிக்கும் சமூகம் Biloela நகரில் இருப்பதை தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முருகப்பன் குடும்பத்தின் நண்பியும் அவர்களுக்கு ஆதரவான நீண்டகால போராளியுமான Angela Fredericks தொழிற்கட்சியின் அன்டனி ஹெல்பனிஸின் வெற்றியை நேற்று மாலை முருகப்பன் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

மிக நீண்ட, துன்பமான கதை இறுதியில் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் Angela Fredericks தெரிவித்துள்ளார்.

முருகப்பன் நடேசலிங்கம் குடும்பம் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் வீட்டில் இருந்து வெளியில் இருந்தனர். அவர்கள் நேசித்த நகரில் இருந்து எப்போது அவர்களை வெளியில் அழைத்துச் செல்லக் கூடாது எனவும் Angela Fredericks கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற முருகப்பன் நடேசலிங்கம், கோகிலபத்மப்பிரியா ஆகியோர் அவுஸ்திரேலியாவில் திருமணம் செய்து, Biloela நகரில் வசித்து வந்தனர்.

அந்நாட்டு அதிகாரிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு அவர்கள் வசித்து வந்த Biloela நகரில் உள்ள வீட்டில் இருந்து அழைத்துச் சென்று மெல்பேர்னில் உள்ள தடுப்பு முகாமில் தங்க வைத்தனர்.

இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுகவீனம் காரணமாக தர்னிக்கா மற்றும் முருகப்பன் குடும்பத்தினர் பேர்த் நகரில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். முருகப்பன் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம் வழங்க வேண்டும் என அந்நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற சமஷ்டி பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது.

இதனையடுத்து முருகப்பன் குடும்பத்திற்கு Biloela நகரில் சென்று தங்க அனுமதி வழங்கப்படும் என்பதுடன் அவர்களின் புகலிட கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் வசிக்க அனுமதி வழங்கப்படும் என நம்பப்படுகிறது.

No comments

Powered by Blogger.