Header Ads



ஏறாவூரில் பலகோடி ரூபாய் சொத்துக்கள் சாம்பலாகின - 1600 பேர் தொழில் செய்யும் தொழிற்சாலையும் நாசம்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 10.05.2022 வன்முறைக் கும்பல் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதில் ஆடைத் தொழில்சாலை> அமைச்சரின் அலுவலகம்> உணவகம்> வீடு உள்ளிட்ட பல சொத்துக்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டிற்குச் சொந்தமான இடங்களை இலக்கு வைத்தே இந்த அழிப்புச் சம்பவங்கள்; இடம்பெற்றுள்ளன.

முன்னதாக அமைச்சரின் அலுவலகத்திற்கு தீ வைத்த கும்பல் பின்னர் உணவகம் அதனோடு இணைந்திருந்;த வீடு  என்பனவற்றையும் எரித்துள்ளது.

சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டதும் பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடங்களுக்கு விரைந்தபோதும் ஏற்கெனவே அமைச்சரின் அலுவலகம் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

அவரது அலுவலகத்தில் இருந்த சுமார் 15 இற்கு மேற்பட்ட கணினிகள் அத்துடன் அனைத்து இலத்திரனியல் உபகரணங்களும் அலுவலகப் பாவனை உபகரணங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இதனிடையே புன்னைக்குடா வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் மூன்று ஆடைத்தொழில்சாலைகள் பலத்த சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்திராதிகள்> மின் பிறப்பாக்கிகள்> ஜன்னல் கண்ணாடிகள் என்பனவும் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் பலகோடி ரூபாய் பெறுமதியுள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலகக் கும்பல்கள் மாலையிலிருந்து நள்ளிரவு வரை இந்த வன்முறைச்  சம்பவங்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

ஏறாவூரிலுள்ள சர்வதேச தரத்திலமைந்த இந்த ஆடைத் தொழில்சாலைகளில் சுமார் 1600 தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் நேரடியாக தொழில் வாய்ப்புப் பெற்றிருக்கின்ற அதேவேளை சுமார் 5000 குடும்பங்கள் மறைமுக தொழில் வாய்ப்பின் மூலம் நன்மையடைந்து வந்ததாக அங்கு பணியாற்றுவோர் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.