Header Ads



என்னை கணக்கிலேயே எடுப்பதில்லை, எதிர்க் கட்சியில் இருந்து மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாது - அலிசப்ரி ரஹீம்


பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சகல பிரேரணைகளையும் எதிர்த்து வாக்களிக்கும்படி அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, மற்றைய சந்தர்ப்பங்களில் கட்சி என்னை கணக்கிலேயே எடுப்பதில்லை என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) தெரிவித்தார். 

2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை மற்றும் அ.இ.ம.கா கட்சியால் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (28) மாலை பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாமல் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தனர். 

தேர்தல் காலங்களில் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்த பெரும்பன்மை இனக் கட்சிகளுக்கு வாக்களிதோமே தவிர, எங்களுக்கென்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை. 

இந்நிலையில்தான் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள கட்சி பேதங்களுக்கு அப்பால் கூட்டணியாக களமிறங்கி எதிர்பார்த்தபடி உறுப்பினர் ஒருவரையும் பெற்றுக்கொண்டோம். 

புத்தளம் மக்களின் மூன்று சதாப்தங்களுக்கும் மேலான கனவுதான் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். 

எனவே, மக்களுக்கு பணியாற்றவே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானேனே தவிர, எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினருக்கான சலுகைகளை பெறுவதற்கு அல்ல. 

ஆகவே, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கும், என்னுடைய மாவட்டத்திற்கும் பணியாற்ற முடியும் என்ற எதிர்பார்ப்பில் பலருடன் ஆலோசனைகளை பெற்று அரசுக்கு ஆதரவு வழங்கி இணைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளேன். 

கடந்த தேர்தல் காலங்களில் புத்தளத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் பெரும்பான்மை உறுப்பினர்கள் எமது மக்களின் நலன்கள், அபிவிருத்தி விடயங்களில் அக்கறை செலுத்தினாலும் எமது மக்களுடைய தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. 

எமது புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு நிறையத் தேவைகள் காணப்படுகின்றன. ஆகவே, எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவும் முடியாது. 

இதுதொடர்பில் எமது கட்சிக்கு நான் பல தடவைகள் தெளிவுபடுத்தியிருக்கிறேன். வடகிழக்கில் அரசியல் செய்வதைப் போல புத்தளம் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது. 

அதுமாத்திரமன்றி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான நான், உயர்பீட உனுப்பினராகவும் இருக்கிறேன். இந்நிலையில் கட்சியால் நடத்தப்படும் எந்த கலந்துரையாடல்களுக்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. 

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எம்மை அழைத்து, எடுக்கும் தீர்மானம் பற்றி எந்த ஆலோசனைகளும் கேட்பதில்லை. தீர்மானம் எடுத்த பின்னர் முடிவை மாத்திரமே அறிவிக்கிறார்கள். 

கட்சி ஒரு சரியான முடிவை எடுக்கும் பட்சத்தில் அம்முடிவுக்கு என்னால் கட்டுப்பட முடியுமே தவிர, தவறான முடிவுகளுக்கு, எங்களோடு ஆலோசனைகள் பெறாத முடிவுகளுக்கு ஒருபோதும் என்னால் கட்டுப்பட முடியாது. 

புத்தளம் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துதான் எனக்கு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறார்கள். எனவே, புத்தளம் மக்களின் எதிர்பார்ப்புக்களை இந்த அரசாங்கத்தின் மூலம் நிச்சயமாக நிறைவேற்றிக் கொடுப்பேன். 

2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையால், கட்சியிலிருந்து என்னை இடைநிறுத்தியுள்ளதாக வாட்சப் மூலம் அறிவித்தார்கள். எனினும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லை. 

அவ்வாறு எழுத்து மூலம் அறிவித்து ஒழுக்காற்று விசாரணைக்கு அழைத்தால் 2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களித்தேன் என்று எனது பக்க நியாயங்களை தெளிவுபடுத்துவேன் என்றார். 

முஸ்லிம் தேசிய கூட்டணி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் ஆவார். 

அ.இ.ம.கா , ஸ்ரீ.மு.கா உள்ளிட்ட கட்சிகள் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் தேசிய கூட்டணியில் தனித்துப் போட்டியிட்டதுடன், அதில் பாராளுமன்ற உறுப்பினராக அலிசப்ரி ரஹீம் தெரிவானார். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நிலையில், அக்கட்சியின் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், 20 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு வழங்கியது முதல் அரசுக்கு ஆதரவு உறுப்பினராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

-ரஸ்மின்-

3 comments:

  1. Puttalam makkal therndu edutha muttal.

    ReplyDelete
  2. Neengal kanakku sariyaha saivathillai.athanal than ungalai kanakkil eduppathillai.

    ReplyDelete
  3. கணக்கெடுக்கத் தகுதிவாய்ந்த ஒரு எம் பீயாக இவர் இல்லை என்பதை அவரே தெரிவித்துள்ளார். பதவிக்குத் தகுதியற்றவர்களை நியமித்ததன் விளைவுதான் தவளைகளின் குணம் இவர்களிடம் சாதாரணமாக காணப்படுகின்றது. தவளைகளின் குரங்குகளின் இயற்கைக்குணம் இவர்களிடம் சாதாரணமாகக்காணப்படுகின்றது. இதுபோன்ற நபர்களை இனம்கண்டு சிறிய கட்சிகள் இவர்களை ஓரம்கட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.