Header Ads



'20க்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு தேவையென்றால் அதனை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயார்': அலிசப்ரி


(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல தேவையான எந்த விடயமும் இல்லை. அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் அதிகமானவர்களால் மனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதனை நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அரசாங்கம் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது அதற்கு  எதிராக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் அதுதொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருத்த சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அத்துடன் 20ஆவது சட்ட திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பை மேற்கொண்டு நிறைவேற்றுவதற்குரிய எந்த திருத்தமும் இல்லை என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. சட்டமா அதிபரும் அதனை எமக்கு உறுதிப்படுத்தி இருந்தார். எவ்வாறு இருந்தாலும்  20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கும் செல்லவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதற்கும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. அரசாங்கம் ஒருபோதும் சட்டத்தை மீறி செயற்படப்போவதில்லை. நீதிமன்றத்தைபோன்று  பாராளுமன்றத்துக்கும் கவனம் செலுத்துவோம்.

மேலும் 20ஆவது திருத்தம் அரசாங்கம் அவசரப்பட்டு கொண்டுவந்ததொன்று அல்ல. 19ஆம் திருத்தத்தை இல்லாமலாக்கி, 20ஆம் திருத்தத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி தேர்தலின்போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் அதேபோன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரையின்போதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தெரிவித்து முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலமே தற்போது கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. சாதாரண முறைமையிலே அது சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் 20ஆவது திருத்த சட்டமூலம் அவசரப்பட்டு கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் அதில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டால் பாராளுமன்ற விவாதத்தில் அதனை மேற்கொள்ளலாம். 20மூலம் மீண்டும் 1978 அரசியலமைப்புக்கு செல்வதுடன் விரைவான பொருளாதார அபிவிருத்தி ஒன்றை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதே இதன் பிரதான நோக்கமாகும் என்றார்.

1 comment:

  1. ஏற்கனவே உள்ள யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பெரிய அளவில் செயற்படத் தேவையில்லை. என்ன தேவையோ அதனைச் செய்வோம். எது ஆதவையில்லையோ அதனை நீக்குவோம். புதிய யாப்பு உருவாக்கம் எனில் நிச்சயமாக மக்களின் அனுமதியைப் பெறத்தான் வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.