Header Ads



அளிக்கப்படும் வாக்குகளை யாராலும் இனங்காண முடியாது, அச்சமின்றி வாக்களிக்குமாறு கோரிக்கை

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் யாராலும் இனம் காணமுடியாது. அவ்வாறான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது. அதனால் வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கலாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் யார் எந்த கட்சிக்கு வாக்களித்தமை தொடர்பில் அறிந்துகொள்ளலாம் என தெரிவித்து வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில்  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் யார் எந்த கட்சிக்கு தனது வாக்கை அளித்தார் என்பதை தங்களால் அறிந்துகொள்ள முடியும். அதனால் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து மாட்டிக்கொள்ளவேண்டாம் என ஒருசில வேட்பாளர்கள் வாக்காளர்களை அச்சுறுத்தும்வகையில் செயற்பட்டுள்ளளர். குறிப்பாக தேர்தல் பிரசார காலங்களில் தேர்தல் பிரசார மேடைகளிலும் இவ்வாறு பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றனர்.

வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் சுகாதார பிரிவினரும் நடவடிக்கை எடுத்துள்ளன. அதேபோன்று அளிக்கப்படும் வாக்காளர்களின் இரகசியத்தன்மை நூறுவீதம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. வாக்காளர்களால் அளிக்கப்படும் வாக்கு, யாருக்கு அளிக்கப்பட்டமை தொடர்பில் யாருக்கும் அறிந்துகொள்ள முடியாது. 

அவ்வாறு அறிந்துகொள்ளலாம் என தெரிவிப்பது, உண்மைக்கு புறம்பானது என்பதுடன் வாக்காளர்களை பயமுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செயலாகும். அதனால் அவ்வாறான எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக தங்களது வாக்குகளை அளிப்பதற்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

அத்துடன் வாக்களிக்க செல்லும்போது செல்லுபடியாகும் அடையாள அட்டையை கொண்டுசெல்ல தவறக்கூடாது. அதேபோன்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் 2019 வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் பதிவு செய்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கலாம். அதற்கான அனுமதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியிருக்கின்றது என்றார்.

No comments

Powered by Blogger.