Header Ads



நீல நிறத்தை வேறு கட்சிகள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துங்கள் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு சு.க. கடிதம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீல நிறத்தை  வேறு கட்சிகள் பாவிப்பதை தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா சுதந்திர கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் கட்சியின் நிறம் நீல நிறம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் கட்சியின் யாப்பு அங்கிகரிக்கப்பட்ட காலம்தொட்டு அதன் முதலாவது பந்தியில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. யாப்பின் முதலாவது பந்தியில், கட்சியின் பெயர் சிறிலங்கா சுதந்திர கட்சி என்றும் கட்சியின் தேர்தல் சின்னம் கை என்றும் கட்சியின் நிறம் நீல நிறம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எமது கட்சியின் யாப்பின் பிரதி ஒன்று இதற்கு முன்னர் உங்களுக்கு அனுப்பியுள்ளோம்.

என்றாலும் இடம்பெறும் தேர்தல் பிரசாரங்களின்போது வேறு சில அரசியல் கட்சிகளினால், தங்கள் கட்சியின் நிறம், நீல நிறம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் (இந்த தேர்தலில்) உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி நீல நிறத்தை பாவிப்பதாக தேர்தல் மேடைகளில் அறிவித்திருக்கின்றது. இது தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்கள் ஊடாக பிரசாரமாகி இருந்தது.

இந்த நடவடிக்கையானது சிறிலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால அடையாளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும். அண்மையில் உருவாக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளினால் வேறு அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அதன் நிறத்தை அறிவித்திருக்கின்றது.

சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு நீண்டகால வரலாறு இருப்பதுடன் அதன் நிறம் நீலம் என்றும் முழு நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதனால் அதன் உரிமையை வேறு கட்சிகளுக்கு பயன்படுத்துவதற்கு இடமளிப்பது மக்களின் ஜனநாயக ரீதியில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு இருக்கும் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அதனால் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிறமான நீல நிறத்தை வேறு அரசியல் கட்சியினால் பயன்படுத்துவதை தடைசெய்வதற்காே தடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.