Header Ads



ரம்ஸி ரஸீக்கினை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

(நா.தனுஜா)

சமூகவலைத்தள செயற்பாட்டாளரான ரம்ஸி ரஸீக்கின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டு, எவ்வித நிபந்தனைகளுமின்றி அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அமைதியான முறையில் கருத்துச்சுதந்திர உரிமையைப் பயன்படுத்தித் தமது கருத்துக்களை வெளியிடுகின்ற செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனச் சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும் கடுந்தொனியில் வலியுறுத்தியிருக்கிறது.

சமூகவலைத்தள செயற்பாட்டாளரன ரம்ஸி ரஸீக்கினால் அவரது பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்ட  பதிவொன்றுக்காக, அவர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவர் முறையாக சட்டத்தரணியொருவரின் உதவியை நாடுவதற்கும், உறவினர்களுடன் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அவர் பல்வேறு நோய்நிலைமைகளைக் கொண்டிருப்பதால் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளற்ற சிறைச்சாலை சூழலினால் அவருக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் ரஸீக்கின் குடும்பத்தினால் கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

ரம்ஸி ரஸீக் சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிடுவதற்குத் தனக்குள்ள உரிமையினைப் பயன்படுத்தியமைக்காகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் உடனடியாகவும் எவ்வித நிபந்தனைகளுமின்றியும் விடுவிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி ரம்ஸி ரஸீக்கின் விடுதலையை வலியுறுத்தி பதில் பொலிஸ்மாதிபர் சந்தன விக்ரமரத்னவிற்குக் கடிதமொன்றை எழுதுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அதற்காக மன்னிப்புச்சபை வெளியிட்டிருக்கும் மாதிரிக் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

கருத்துச்சுதந்திர உரிமையைப் பயன்படுத்தித் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்தமைக்காகக் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியிலிருந்து பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ரம்ஸி ரஸீக்கின் நிலை கவலையளிக்கிறது. அத்தோடு ரஸீக் கைது செய்யப்பட்டதிலிருந்து அவருடன் பேசுவதற்கு அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மூட்டுவலி, சிறுநீரகநோய், கல்லீரல் நோய் உள்ளிட்ட சில நோய்நிலைமைகளைக் கொண்ட அவருக்குப் போதுமான சுகாதார வசதிகள் வழங்கப்படாதிருப்பது ஆபத்தானதாகும்.

மேலும் அவரால் பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்ட பதிவையடுத்து அவருக்கு உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக ரஸீக் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 11.04 மணிக்கு மின்னஞ்சல் ஊடாக உங்களிடம் முறைப்பாடளித்திருக்கிறார். ஆனாலும் அவருடைய முறைப்பாடு தொடர்பில் செயற்திறனாக விசாரணையை மேற்கொள்வதற்குப் பதிலாகக் குற்றவிசாரணைப்பிரிவினர் அவரைக் கைது செய்திருக்கின்றனர். அவரைக் கைது செய்தமைக்காக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனச் சட்டத்தையும் கணினிக் குற்றச்செயல்கள் சட்டத்தையும் பொலிஸார் மேற்கோள் காட்டியதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.

அமைதியான முறையில் தங்களது கருத்துச்சுதந்திரத்தைப் பயன்படுத்தியவர்களைக் கைது செய்வதற்கும், அவர்களைத் தடுத்துவைப்பதற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனச் சட்டத்தைப் பயன்படுத்துவதென்பது சர்வதேச மனித உரிமைச்சட்டங்களை முற்றிலும் மீறும் நடவடிக்கையாகும். அதுமாத்தரமன்றி இலங்கையின் அரசியலமைப்பினால் உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகளையும் அது மீறுகின்றது.

தற்போது பரவிவரும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று நிலைமை ரஸீக்கிற்கு மேலும் ஆபத்தானதாகும். இது உலகளவில் பேரழிவை ஏற்படுத்திவருவதுடன், அதிகளவில் தொற்று ஏற்படக்கூடிய இடமாக சிறைச்சாலைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகையதொரு சூழ்நிலையில் ரம்ஸி ரஸீக் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவதுடன், எவ்வித நிபந்தனைகளுமின்றி அவர் விடுவிக்கப்பட வேண்டும். அவர் விடுதலை செய்யப்படும் வரையில் முறையான சுகாதாரப்பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.

 மேலும் அவரது குடும்பத்தாருடனும், சட்டத்தரணியுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதுமாத்திமன்றி அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடுகின்ற செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனச் சட்டத்தைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.