Header Ads



Dr ஷாபி விவகாரம்; குற்றச்சாட்டை முன்வைத்த பெண் ஒருவரின் முறைப்பாடு பொய்யானது

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராகவிருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது கருத்தடை விவகார முறைப்பாட்டை முன்வைத்த பெண்ணுக்கு, குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளில் அவரது பெலோபியன் குழாயில் எந்த தடைகளும், தடங்கல்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. பெலோபியன் குழாயில் தடை ஏற்படுத்துவதன் ஊடாக சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடை செய்தார் என வைத்தியர் ஷாபி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, குருநாகல் நீதிமன்றின் உத்தரவில் பேரில் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில், நதீகா எனும் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு எச்.எஸ். ஜி. பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பெண்ணுக்கு வைத்தியர் ஷாபி எல்.ஆர்.டி. சத்திர சிகிச்சையை, அப்பெண்ணின் அனுமதியின்று செய்ததாக குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே, நீதிமன்ற உத்தரவில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொடர்பில் சி.ஐ.டி.யின் இந்த விவகாரத்தை தற்போது கையாளும் பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹான் விஜேகோனும், அந்த பரிசோதனையின் முடிவை தாய்மார் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சானக அபேவிக்ரமவும் நீதிமன்றில் வெளிப்படுத்தினர்.

இதன்போது குளியாபிட்டி போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், குளியாப்பிட்டி வைத்தியசாலை தொடர்பிலேயே நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்ட சட்டத்தரணி சானக அபேவிக்ரம, இந்த பரிசோதனை முடிவு வைத்திய மாபியாவின் ஒரு அங்கம் என எண்ணத் தோன்றுவதாக கூறினார்.

சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நேற்று குருநாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது பிணையில் உள்ள வைத்தியர் ஷாபி மன்றில் ஆஜராகியிருந்தார்.

1 comment:

  1. Any doctors can give opinion regarding HSG investigations. There will be series of xrays, if those xrays are examined truth will reveal.

    ReplyDelete

Powered by Blogger.