Header Ads



ஐ.தே.கவின் குப்பைகளை கிளற, எனது தந்தைக்கு நேரமில்லை - நாமல்

(ஆர்.ராம்)

பாராளுமன்ற அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக மக்களை ஏமாற்றி தந்திரமாக வாக்குகளைப் பெறுவதற்காகவே ஜனாதிபதி கோத்தாபயவுடன் இணைந்து செயற்பட தயாரென்று ரணில், சஜித் தரப்புக்கள் அறிவித்துள்ளன என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்தவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள தோல்வியின்டி அச்சத்தால் அவர் மீதும், என்மீதும் வீணான பழிகளை சுமத்த ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்ற தேர்தல் அண்மித்துவருகின்றது. இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும், சஜித் பிரேமதாஸ தலைமையிலும் இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளன. இந்த இரண்டு அணிகளுக்குமே பொது எதிரியாக இருப்பவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே.

அவ்வாறான நிலையில் இந்த இரண்டு அணிகளும் தேர்தலில் வெற்றி பெறுவற்கான பொதுமக்களுக்கு ஏதாவது காரணத்தினைக் கூற வேண்டியிருக்கின்றது. அதன் காரணமாகவே ரணில், சஜித் அணியினர் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றி முடியும் என்று கூறிவருகின்றார்கள்.

அதேநேரம் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு சூழ்ச்சியாகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், நானும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு விரும்பாதுள்ளதாகவும், அதற்காக தடைகளை திரைமறைவில் ஏற்படுத்தி வருவதாகவும் பொய்யான பிரசாரம் செய்து வருகின்றார்கள்.

ஆகவேதான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சிறந்தவர் என்றும் பிரதமர் மஹிந்தவும், நானும் மோசமானவர்கள் என்றும் மக்கள் மத்தியில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை திணித்து வருகின்றார்கள்.

உண்மையிலேயே சஜித் பிரேமதாஸ, அம்பாந்தோட்டையில் தேர்தலில் போட்டியிட வரும்போதே அப்போதிருந்த மூத்த அரசியல்வாதிகள் என்றோவொரு நாள் அவர் அம்பாந்தோட்டையையும், மக்களையும் கைவிட்டுச் செல்வார் என்று கூறியிருந்தார்கள். அது நடைபெற்றிருக்கின்றது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவின் பின்னணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே செயற்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார். இதுவும் அபத்தமானதாகும்.

2015ஆண்டு எமது அரசாங்கம் ஒப்படைத்த நிலையில் நாட்டின் நிலைமைகள் தற்போது இல்லை. 2019இல் மீண்டும் நாட்டின் ஆட்சிப்பொறுப்பினை நாம் எடுக்கும்போது மிக மோசமான நிலைமையிலேயே இருந்தது. தற்போதும் அந்த நிலைமையே நீடிக்கின்றது.

ஆகவே பிரதமர் மஹிந்த நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியே சிந்தித்து செயற்பட்டுக்கொண்டிருக்கையில் ஐ.தே.கவின் குப்பைகளை கிளறிக்கொண்டிருக்க அவருக்கு நேரமே இல்லை. தனது கட்சித்தலைவருக்கு எதிராக செயற்பட்டு கட்சிப் பிரச்சினையை கட்சிக்குள் தீர்க்காது சஜித் பிரேமதாஸ வெளியேறியுள்ள நிலையில் அவருடைய இயலாமையை மறைப்பதற்கு எம்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார் என்றார்.

No comments

Powered by Blogger.