Header Ads



தேர்தல் பிரசாரங்கள் சேறுபூசுபவையாகவும், அர்த்தமற்றவையாகவும் நிறைந்திருக்கின்றன

பொதுத்தேர்தல் பிரசாரங்கள் வழமைபோன்று சேறுபூசுபவையாகவும், அர்த்தமற்ற கருத்தாடல்களாலுமே நிறைந்திருக்கின்றன.

இவை புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச்செய்யும். எனினும் அவர்கள் நினைத்தால் இந்த வழக்கமான சுற்றுவட்டத்தைத் தகர்த்தெறிய முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் அனைத்து ஊடகங்களும் பொறுப்புணர்வுடனும், பக்கச்சார்பின்றியும் செயற்பட வேண்டுமென்று கரு ஜயசூரிய தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

அதன் தொடர்ச்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

தற்போது வெளிவரும் செய்திகள் அனைத்துமே வழமைபோன்று சேறுபூசுபவையாகவும், பயனற்ற கருத்துக்களாலும், அர்த்தமற்ற கருத்தாடல்களாலுமே நிறைந்திருக்கின்றன. இந்நிலை தொடருமாக இருந்தால் ஒழுக்கமானதும், நேர்மையானதுமானதுமான ஓர் அரசியல் கலாசாரம் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பு மீண்டும் தோற்றுப்போய்விடும்.

இத்தகையதொரு வழமையான சுற்றுவட்டத்தை வாக்காளர்களால் மாத்திரமே தகர்த்தெறிய முடியும். அவர்கள் முழுவதுமாக இறையாண்மை உடையவர்களாவர் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி அரசசேவையாளர்கள் அவர்களது கடமையைச் செய்வதற்காக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டியிருக்கும் அவர், எப்பாடுபட்டேனும் அரச சேவையாளர்களின் சுயகௌரவமும், சுதந்திரமும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

No comments

Powered by Blogger.