தற்போதைய அரசாங்கம், அமெரிக்காவுக்கு அஞ்சுகிறதா..? மேர்வின் கேட்கிறார்
வெளிநாடுகளில் திரும்பும் இலங்கையர்கள் நாடு திரும்பியதும் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தி, 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கும் அரசாங்கம், அமெரிக்க பிரஜைகளுக்கு தனியான சட்டத்தை கடைபிடிப்பதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வித பரிசோதனைகளும் இன்றி அமெரிக்க பிரஜைகள் நாட்டுக்குள் வர எப்படி சந்தர்ப்பம் வழங்கப்பட்டது எனவும் அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி PCR பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளாமல் நாட்டுக்குள் வந்துள்ளதன் மூலம் தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுக்கு அஞ்சியுள்ளது அல்லது அமெரிக்காவுடன் இரகசிய உடன்படிக்கையை செய்துக்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இரட்டை நிலைப்பாடுகளை கையாளும் அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து இலங்கையர்களும் அணித்திரள வேண்டும். அரசாங்கத்தின் இப்படியான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை காட்டுவதற்காக ஒன்றிணையுமாறு அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment